தவெகவில் இணைந்த நான்கு அதிமுக எம்எல்ஏக்கள்

தவெகவில் இணைந்த நான்கு அதிமுக எம்எல்ஏக்கள்

2 mins read
0b6cbd58-4566-4436-9c07-7079f26b4867
தேர்தலில் வெற்றி பெற்ற 21 நாள்களில் நான்கு எம்எல்ஏக்கள் பதவியைத் துறந்திருப்பது அரசியல் களத்தில் புது விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளனர்.

இதையடுத்து, நான்கு எம்எல்ஏக்களும் வெற்றி பெற்ற தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற 21 நாள்களில் நான்கு எம்எல்ஏக்கள் பதவியைத் துறந்திருப்பது அரசியல் களத்தில் புது விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கடந்த 10ஆம் தேதி ஆட்சி அமைத்ததுடன், 14ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது.

திடீர்த் திருப்பமாக, அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, அக்கட்சி எம்எல்ஏக்களில் 25 பேர் முதல்வர் விஜய்க்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததுடன், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 13 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஒரு தகவல் வெளியானது.

ஆனால், அதிமுக மூத்த தலைவர்கள் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் அக்கட்சி பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வரிந்துகட்டிய 25 எம்எல்ஏக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.

இதனால் அவர்கள் மீண்டும் பழனிசாமியுடன் அணிகோத்துவிட்டதாக திங்கட்கிழமை (மே 25) மற்றொரு தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் எல்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேர் திங்கட்கிழமை தவெகவில் இணைந்தனர்.

முன்னதாக, நால்வரும் தங்களது ராஜினாமா கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் நேரில் அளித்தனர்.

அவர்களுடைய ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து பதவி விலகிய அந்த நான்கு எம்எல்ஏக்களும் திங்கட்கிழமை முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து தவெகவில் இணைந்தனர்.

சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது நான்கு பேர் பதவி விலகியதை அடுத்து, தமிழகத்தில் ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளன. அத்தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனிடையே, பதவி விலகிய நான்கு பேரும் தங்களுடைய முடிவுக்கு குதிரைப்பேரம் காரணமல்ல என்றும் தொகுதி மக்களின் விருப்பப்படியே செயல்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்