திருச்சி: திருச்சியில் திமுகவின் 12வது மாநாடு திங்கட்கிழமை கோலகலமாக நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்வோருக்கு கம,கம பிரியாணி வழங்கப்படும் என்றும் திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில், “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற தலைப்பில் திருச்சி சிறுகனூரில் தேர்தல் அரசியல் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான நேரு தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிறுகனூரில் மாநாட்டுக்காக 700 ஏக்கர் மாநாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 200 ஏக்கரில் மாநாட்டு அரங்கமும், 240 அடி நீள பிரம்மாண்ட மேடையும் பிரம்மாண்ட எல்இடி திரையும் அமைக்கப்பட்டன.
இதுதவிர, மாநாட்டுத் திடலில் 168 இடங்களில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டன. கோட்டை வடிவில் 1,000 அடி நீளத்துக்கு பிரம்மாண்ட முகப்பு அமைக்கப்பட்டு ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.
மாநாட்டில் 3.60 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 48 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டன. மாநாட்டுக்கு வருவோருக்கு குடிநீர் பாட்டில் அடங்கிய பை ஒன்று வழங்கப்படுகிறது. மேலும், மாநாட்டு திடலில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி வருகிறார்.
மாநாட்டு வளாகத்தின் முகப்பில் உள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி விட்டு அரங்கிற்குள் செல்கிறார். அங்கிருந்து 600 அடி நீள பாதையில் நடந்து மேடைக்குச் செல்கிறார்.
இதற்கிடையே மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகிகளுக்காக சைவ, அசைவ மதிய உணவு தயார் செய்யப்பட்டது. அசைவத்தில் கமகமக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 ஆகிய உணவுகள் தயாரிக்கப்பட்டது. அதன்படி, 10 லட்சம் பேருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மட்டன், 80 ஆயிரம் கிலோ கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்டது. சிறப்பு சைவ உணவும் தயார் செய்யப்பட்டது.

