கூட்டணிக்கு தவெக விருப்பம்: காங்கிரஸ் பொறுப்பாளர்

கூட்டணிக்கு தவெக விருப்பம்: காங்கிரஸ் பொறுப்பாளர்

2 mins read
3ac45a7c-c117-46ba-879e-9b238e1c4d17
‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திற்கு கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல் அளித்தார். - படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தயாராக இருக்கிறது என்று தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் உயர் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

சில நாள்களுக்கு முன்னர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னைக்குச் சென்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திற்கு கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது தவெக தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

“தவெக எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. எங்கள் பலத்தை தவெக அங்கீகரித்துள்ளது,” என்றார் கிரிஷ்.

“கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக எங்களை நேரடியாக அழைக்கவில்லை. அவர்களின் அழைப்புக்காகக் காத்திருக்கிறோம். கனிமொழியை மரியாதை நிமித்தமாகவும், கூட்டணியை நல்ல வழியில் கொண்டு செல்வதற்காகவும் சந்தித்தோம். எங்களின் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்துள்ளோம்,” என்றார் அவர்.

தற்போது காங்கிரஸ், கூட்டணி தொடர்பாக திமுக தலைமையுடன் மட்டுமே பேசி வருகிறது என்றும் கிரி‌ஷ் தெரிவித்தார்.

“அரசியலில் மகிழ்ச்சி என்றோ, ஏமாற்றம் என்றோ எதுவும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஓர் இலக்கு, எண்ணம் இருக்கும். மக்கள் அதை ஏற்கிறார்களா என்பதுதான் முக்கியம்,” என்று கிரிஷ் குறிப்பிட்டார்.

ஆட்சியைத் தக்க வைப்பதற்கு திமுக கூட்டணி தீவிரம் காட்டுகிறது. இருப்பினும் திமுக-காங்கிரஸ் இடையே அவ்வப்போது பூசல் உள்ளது.

திமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்டு காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் திமுக அதை ஏற்கவில்லை.

இன்னும் ஒரு சில நாள்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு, யாருடன் கூட்டணி, அடுத்த திட்டம் என்ன என்பதுபோன்ற தகவல்கள் வெளியாகும் என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்