சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை எதிரொலிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின், துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதுகுறித்து திமுக தலைமை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இதையடுத்து, தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், விஜய்யுடன் சட்டமன்றத்தில் நேரடியாக மோத இளையரான உதயநிதி பொருத்தமாக இருப்பார் என திமுக தலைமை கருதுவதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.
தமிழகத்தின் புதிய அரசுக்கும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கும் வாழ்த்து தெரிவிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“திமுக தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்கள் எதிரொலிப்போம்.
தொடர்புடைய செய்திகள்
“ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்,” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இனி மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஊடகமாகத் திமுக செயல்படும் என்றும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கு ஏற்ப நூறு விழுக்காடு உண்மையாக இருந்து உழைக்கப்போவது உறுதி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

