நீயும் நானும்; நானும் நீயும்

நீயும் நானும்; நானும் நீயும்

3 mins read
33c44a31-510a-4920-97da-8cab36d93f25
இரட்டை இலை 169 தொகுதிகளிலும் உதயசூரியன் 176 தொகுதிகளிலும் களத்தில் உள்ளன. - படம்: செயற்கை நுண்ணறிவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் தனிக்கட்சிகளைத் தவிர்த்து, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என்னும் இருபெரும் கூட்டணிகளே களத்தில் உள்ளன. அதிமுக, திமுக தலைவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து கடுமையாகப் பிரசாரம் செய்தாலும் இரு கட்சிகளும் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

கழுத்தைப் பிடிக்கும் கட்சிகளுக்கு வேலை செய்யாமல் ஒதுங்கியிருப்பது என்னும் உத்தியில் அவை ஒற்றுமையாக உள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்னர் மக்கள் நலக்கூட்டணியாக இறங்கி, திமுகவின் வெற்றியைப் பறித்த அத்தனை கட்சிகளும் (தமாகா தவிர) இப்போது திமுக கூட்டணியில் உள்ளன.

அதிருப்தியில் அணி மாறும் குணம் உள்ளதால் கூட்டணிக் கட்சிகளின் கை ஓங்கிவிடக்கூடாது என்பதில் அதிமுக, திமுக இரண்டும் கவனமாக உள்ளன.

இந்த விஷயத்தில் அதிமுக தொடக்கத்தில் இருந்தே கவனமாக உள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகளைத் தாராளமாக ஒதுக்குவதுபோலக் காட்டிக்கொண்டாலும், ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாதவையாகத் தோன்றுகின்றன.

2021 தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வென்றது. அவற்றில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் வென்ற தொகுதிகளில் அவர்களுக்கு மீண்டும் தரப்படவில்லை. பாஜக தென்தமிழகம், கொங்கு மண்டலம், சென்னை மண்டலத் தொகுதிகளில் பலமிக்கதாக பார்க்கப்பட்டாலும் அவற்றில் அக்கட்சிக்குக் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மூத்த திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் தொகுதிகளில் தாமரை நடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி ஆகியன அதற்குச் சில சான்றுகள்.

இன்னொரு கட்சியான பாமக போட்டியிடும் 18 தொகுதிகளில் செளமியா அன்புமணியின் தருமபுரி உள்ளிட்ட 11 தொகுதிகளின் வெற்றியைப் பறிக்க டாக்டர் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களை சுயேச்சையாக நிறுத்தியுள்ளது.

பாஜக, பாமக தொகுதிகளின் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்த திமுக, அவற்றில் வெற்றி எளிது எனக் கருதுகிறது. அத்துடன், தாமரை சூடி இருக்கும் தமாகாவின் ஐந்து தொகுதிகளும் நமக்கே என்பது அதன் கனவு.

திமுக கூட்டணிக் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமனத்தோடு இறங்கவில்லை எனக் கூறப்படுகிறது. சென்னை திரு.வி.க. நகரில் அதிமுக துணையுடன் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கைத் திருமாவளவன் பாராட்டியதையும் காட்டுமன்னார் கோவிலில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டுப் பின்வாங்கியதையும் திமுக கவனித்துள்ளதாகப் பேசப்படுகிறது. தேர்தல் உத்திகளைக் கச்சிதமாக வகுப்பதில் கைதேர்ந்த திருமாவிடம் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம் கூட்டணி வெற்றிக்குத் தடையாக இருக்கும் என்றே திமுக கருதுவதாகவும் தெரிகிறது.

மற்றொரு கூட்டணிக் கட்சியான காங்கிரசில் கார்த்திக் சிதம்பரத்தின் குரலையே கேட்க முடிகிறது. ராகுல் காந்தி வருவாரா, எப்போது வருவார் என்ற கேள்விகளுக்கு விடையில்லை. அதனால், திமுகவினர் காங்கிரஸ் களத்தில் ஒதுங்கியே உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்புவரை, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு,” என திருமா கூறிவந்தார். அதனையே காங்கிரசும் எதிரொலித்தது. தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கசப்பை அவ்விரு கட்சிகளும் இன்னும் மறக்கவில்லை என்கிறார்கள் இரு கட்சிக்காரர்களும். அந்தக் கசப்பைச் சாதமாக்கி விசிக, காங்கிரசின் 36 தொகுதிகளையும் அள்ளப் பார்க்கிறது அதிமுக.

ராகுலைப் போலவே கமல்ஹாசனையும் திமுகவினர் தேடுவதாகச் சமூக ஊடகத்தில் காற்றுவாக்கில் ஒரு செய்தி கசிகிறது.

கூட்டுச் சேர்ந்தோரே வேட்டு வைக்கக்கூடும் என்பதை அறிந்தே திமுக 176 தொகுதிகளில் உதயசூரியனையும் அதிமுக 169 தொகுதிகளில் இரட்டை இலையையும் நிறுத்தி உள்ளன என்கிறார் ஓர் அரசியல் பிரபலம். தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி ஏற்பட்டதில்லை என்ற 58 ஆண்டுகால வரலாற்றைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதே அதிமுக, திமுகவின் வேற்றுமையிலும் காணப்படும் ஒற்றுமை. -திருநா

குறிப்புச் சொற்கள்