கொட்டப்போகும் பரிசு மழை; காத்திருக்கும் தமிழக வாக்காளர்கள்

1 mins read
02b2406b-15fc-43ed-83ab-2beb7a8f73b5
திமுகவுக்குப் போட்டியாக 234 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக, பாஜக கூட்டணி சார்பாகவும் பொது மக்களுக்குப் பொங்கல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. - படம்: நியூஸ் 18 தமிழ்

சென்னை: தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பலவிதமான பரிசுப் பொருள்களை வழங்கத் தயாராகி வருகின்றன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இதனால் மக்களிடம் நற்பெயர் கிடைக்கும் என ஆளும் திமுக வட்டாரங்கள் கருதுகின்றன.

திமுகவுக்குப் போட்டியாக 234 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக, பாஜக கூட்டணி சார்பாகவும் பொது மக்களுக்குப் பொங்கல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

வாக்காளர்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ.10,000, வாக்குச்சாவடி முகவர்களுக்கு ரூ.5,000 என அரசியல் கட்சிகள் அள்ளித் தருகின்றன.

ஆளும் கட்சி சார்பில் எரிவாயு அடுப்புகள், எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்சி, கிரைண்டர் எனப் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்படுவதுடன் கோலப் போட்டி, கிரிக்கெட், கபடி என இளைஞர்களைக் கவரும் வகையில் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

திமுகவைப் பொறுத்தவரை நிர்வாகிகள் பலர் வீடுவீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகையை விநியோகித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகள் முதற்கட்டமாக அக்கட்சியின் வாக்காளர்களை மட்டும் அடையாளம் கண்டு பரிசுகளை வழங்கி வருகின்றனர் என்றும் தேர்தல் நெருங்கும்போது அனைத்து வாக்காளர்களும் கவனிக்கப்படுவர் என்றும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மொத்தத்தில் சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழக வாக்காளர்களுக்குப் பரிசு மழை பொழியப் போவதாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்