வடசென்னை கதாநாயகி: இது கீர்த்தனாவின் கதை

சாதனையாளர்களாக மாறிய சாமானியர்கள்

வடசென்னை கதாநாயகி: இது கீர்த்தனாவின் கதை

4 mins read
1ea73345-b9e9-4c18-ae29-eb93f153ddc8
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தனா. - படம்: சதீஷ்
multi-img1 of 3

வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டு, குத்து என்று தமிழ்த் திரைப்படங்களில் சித்திரிக்கப்படுகிறது. ஆனால், வடசென்னை என்ற தனி உலகத்தின் மறுபக்கம் வேறு மாதிரியானது.

வடசென்னையில் இருந்து கேரம் விளையாட்டில் மூன்று உலக வெற்றியாளர்கள் உருவாகியுள்ளனர் என்ற தகவல் உங்களில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவில் கிரிக்கெட் ஆதிக்கத்திலிருந்து தப்பிப்பிழைத்த சில அறிவார்ந்த விளையாட்டுகளில் சதுரங்கத்துக்கு அடுத்து கேரம் எனும் சுண்டாட்டத்தைக் குறிப்பிடலாம்.

15 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட சிறிய வீடு. ஒரு காரைக்கூட அங்கு நிறுத்த முடியாது.

அருகே உள்ள வீடுகளும் சிறியவைதான். வாசலில் நின்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசும் மக்கள், குறுகலான வீதியில் நிறைந்திருக்கும் இருசக்கர வாகனங்கள், ஆங்காங்கே கேரம் போர்டு, சதுரங்கப் பலகைகள் வைத்து விளையாடும் இளையர்கள். இதுதான் வடசென்னையில் கீர்த்தனா வசிக்கும் இடம்.

கடந்த ஆண்டு மாலத்தீவில் நடந்த அனைத்துலக கேரம் போட்டியில் வாகை சூடி, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்.

இந்த வெற்றி அவருக்கு சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. வெற்றியும் வலியும் ஒட்டிப்பிறந்த சகோதரர்களைப் போன்றவை. ஆனால், ஓர் ஆறுதல், வலியின் வேதனையை அனுபவித்தவர்கள் நிச்சயமாக வெற்றி தரும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள்.

கீர்த்தனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. வலி மிகுந்த பாதையில் பயணம் செய்த பிறகே இவருக்கும் வெற்றி சாத்தியமானது.

மாலத்தீவுகளில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்து பங்கேற்று, மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர், குழுப் போட்டி என மூன்றிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்த இளம்பெண்.

22 வயதான கீர்த்தனாவுக்கு சிறு வயதிலிருந்தே கேரம் விளையாட்டில் ஆர்வம். மூட்டைத் தூக்கும் தொழிலாளியான அவரது தந்தை லோகநாதனுக்கு கேரம் விளையாட்டில் அதீத ஆர்வம். வேலை நேரம் போக மற்ற சமயங்களில் அவரை கேரம் பலகை முன்புதான் பார்க்க முடியும்.

அப்படிப்பட்டவர், தன் பிள்ளைகளுக்கு அந்த விளையாட்டைக் கற்றுத் தராமல் போவாரா? கற்றுத் தந்தார்!

மூவரையும் தவறாமல் கேரம் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதில் மூத்தவர் பிரசாந்த். கீர்த்தனாவும் மற்றொரு சகோதரர் கிருஷ்ணாவும் இரட்டையர்கள்.

‘‘அப்பா மூன்று பேரையும் கேரம் விளையாட அழைத்துப் போவார். ஆனால், அவர் 2017ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிறகு அம்மாதான் வீட்டு வேலைகள் செய்து எங்களைப் படிக்க வைத்தார். குடும்ப கஷ்டத்தால் நானும் பத்தாம் வகுப்புப் பிறகு படிக்கவில்லை. வேலைக்குப் போய்விட்டேன். கேரம் விளையாடுவதையும் விட்டுவிட்டேன்,” என்று சொல்லும்போதே கீர்த்தனாவின் கண்கள் கலங்குகின்றன.

எனினும் தெய்வமாகிவிட்ட தனது தந்தை தன்னைக் கைவிடவில்லை என்கிறார். வடசென்னையில் கீர்த்தனா வசிக்கும் செரியன் நகரிலேயே கேரம்மேன் பயிற்சி அகாடமி நடத்தி வரும் நித்தியராஜன் அவருக்கு உதவியுள்ளார்.

“கீர்த்தனா ஆரம்பத்தில் தனியார் கிளப் ஒன்றில் விளையாடினார். அப்போதே அவரை எனக்குத் தெரியும். நானும் என் குழந்தைகளைக் கேரம் விளையாட அங்கு சேர்த்திருந்தேன். அப்போது, என் மகன் மிதுனுக்கு கீர்த்தனாதான் விளையாட்டு நுணக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். மிதுனும் சிறப்பாக விளையாடி இன்றைக்கு தேசிய அளவிலான வீரராக இருக்கிறார். கீர்த்தனா அளித்த பயிற்சியும் அதற்கு முக்கியக் காரணம்.

“ஆனால், அவங்க அப்பா இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கீர்த்தனா வேலைக்குப் போயிட்டாங்க. இதன்பிறகு கொரோனா வந்து அவங்க வீட்டில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது,” என்கிறார் நித்தியராஜன்.

தற்போது இவர் நடத்தி வரும் கேரம் பயிற்சி மையத்தில்தான் கீர்த்தனாவும் அடுத்த வெற்றிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் கீர்த்தனா.

ஆறாவது கேரம் உலகக் கிண்ணப் போட்டியில் வடசென்னையைச் சேர்ந்த காசிமா வாகை சூடினார். அடுத்து, ஏழாவது உலகக்கிண்ணப் போட்டியில் காசிமாவை வீழ்த்தி பட்டம் வென்றார் கீர்த்தனா.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டிக்காக தற்போது தினமும் 16 மணி நேரம் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பயிற்சிதான்.

மகள் உலக வெற்றியாளர் என்பதில் கீர்த்தனாவின் தாயார் இந்திராணிக்கு மிகுந்த பெருமிதம். ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட அந்தச் சின்னஞ்சிறு வீட்டில் கீர்த்தனா பெற்ற வெற்றிக் கிண்ணங்களும் கேடயங்களும் பாதி நிறைந்திருக்கின்றன.

“அவங்க அப்பா இருக்கும்போது நிறைய போட்டிகளில் வெற்றி பெறுவார். என் மகள் வாங்கிய பரிசுகளை வைக்கக்கூட இந்தச் சின்ன வீட்டில் இடமில்ல. எல்லாவற்றையும் ஒரு பெரிய அண்டாவில் வைத்திருக்கிறேன்.

“அவள் அப்பா மாரடைப்பால் இறந்ததும் என்ன பண்றதுனே தெரியல. ரொம்ப கஷ்டப்பட்டோம். குழந்தைகளைக் காப்பாற்ற நான் வீட்டு வேலை செய்தேன். மூத்த மகன் துணிக்கடைக்கு வேலைக்குப் போனார். இரண்டாவது மகனை மட்டுமே படிக்க வைக்க முடிந்தது.

“கீர்த்தனாவால் விளையாட்டை விடமுடியவில்லை. சின்னப் பெண்ணின் நிலைமையை பார்க்கும்போது மனத்துக்குப் பாரமாக இருக்கும். பிறகு அவளை எல்லாரும் ஊக்கப்படுத்தினோம். இப்ப என் மகள் வடசென்னைக்கு மட்டுமல்ல, மொத்த தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்,” என்று பூரிப்புடன் மகள் கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் இந்திராணி.

உலகக் கிண்ணப் போட்டிக்கு மாலத்தீவு செல்ல பணமில்லாமல் கீர்த்தனா தவித்தபோது, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றரை லட்சம் ரூபாய் உதவித் தொகையைக் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

[ο] கீர்த்தனாவின் சாதனையைப் பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளார்.

[ο] கீர்த்தனா சென்னை புது வண்ணாரப்பேட்டையிலுள்ள செரியன் நகரைச் சேர்ந்தவர். இதே செரியன் நகரிலிருந்து கடந்த வருடம் 6வது கேரம் உலகக் கிண்ணத்தை வென்றிருந்தார் காசிமா. இப்போது அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா வென்றுள்ளார். இதனால் வடசென்னைக்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்துள்ளது.

[ο] வட சென்னையைச் சேர்ந்த மரிய இருதயம் ஆடவர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். தற்போது அவரது மேற்பார்வையில்தான் வட சென்னையில் ஏராளமான சிறார்களும் இளையர்களும் கேரம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்