சென்னை: திமுக எம்எல்ஏக்களைப் பதவி விலகச் செய்ய முதல்வர் விஜய்யும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கூட்டுச்சதியில் ஈடுட்டுள்ளதாக திமுக புகார் எழுப்பியுள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி மனு அளித்துள்ளார்.
அதில், தவெகவுக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் திமுக எம்எல்ஏக்களைப் பதவி விலகச் செய்ய சதி நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் தமிழக ஆளுநர் அர்லேக்கருக்கும் திமுக கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரனும் சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வனும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இருவரும் மதிமுகவைச் சேர்ந்தவர்கள்.
எனினும், சட்டப்படி அவர்கள் இருவரும் திமுகவின் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்பட்ட உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ள ஆர்எஸ் பாரதி, இந்த இரு எம்எல்ஏக்களையும் பதவி விலகச் செய்ய குதிரை பேரம் நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய வைகோ, மேற்குறிப்பிட்ட இரு எம்எல்ஏக்களையும் பதவி விலகச் செய்யுமாறு பேரம் பேசத் தம்மிடம் விஜய் கோரியதாக வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார் என ஆர்.எஸ். பாரதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு எம்எல்ஏக்களும் பதவி விலகும் பட்சத்தில், இடைத்தேர்தலில் அவர்களுக்குத் தவெக ஆதரவளிக்கும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்ததாக வைகோ பேசியுள்ளார் என்றும் ஆர்எஸ் பாரதி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். புகார் மனுவுடன் சில காணொளிப் பதிவுகளையும் திமுக இணைத்துள்ளது.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் ஆளுங்கட்சி திட்டமிட்டுச் செயல்படுவதாக ஆர்எஸ் பாரதி சாடியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாகவே, அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளான எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யாபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்துப் பதவி விலகத் தூண்டப்பட்டு தவெகவில் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

