கோவை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்தால் விசிக, திமுக இடையேயான உறவில் மீண்டும் சலசலப்பு நிலவுகிறது.
ஆதவ் அர்ஜுனா மீது உரிய நடவடிக்கை எடுக்க, திமுகவினர் வலியுறுத்தி வரும் நிலையில், கட்சியின் மூத்த தோழர்களுடன் கலந்து பேசித்தான் எந்த முடிவும் எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விசிக துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா, அண்மைய தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், அமைச்சர் உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
“சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா?,” என்று ஆதவ் அர்ஜுனா பேட்டியில் தெரிவித்த கருத்து, திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இரு கட்சிகளுக்கு இடையே மீண்டும் மறைமுக மோதல் வெடித்துள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழாது என்றும் எழுவதற்கு வாய்ப்பும் இல்லை என்றும் திரு. தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுப்போம். உட்கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசி உள்ளேன். மீண்டும் நாங்கள் கலந்துபேசி அதுதொடர்பான முடிவுகளை எடுப்போம்,” என்று திருமாவளவன் கூறியதாக இந்து ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.