பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனை

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனை

3 mins read
b10d204d-18c6-4623-9add-a52bb6dc26fe
தமிழகத்தில் உள்ள 62 பத்திரப் பதிவகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு, கணக்கில் வராத லட்சக் கணக்கான பணத்தைக் கைப்பற்றினர். - படம்: சமயம்

சென்னை: கோவை, திருச்சி, சிவகங்கை, சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்டது.

திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். அப்போது லட்சக்கணக்கான கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 3 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடந்தது.

பொதுமக்கள் தங்களின் நிலம், வீடு போன்ற சொத்துக்களைப் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களை நாடும்போது, சில இடங்களில் தடையின்றி வேலை முடிவதற்கும், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கும் லஞ்சப் பணம் கோரப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இணையம் மூலம் பத்திரப் பதிவுச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பொதுமக்களிடம் இருந்து மறைமுகமாகப் பணம் வசூலிக்கப்படுவதாக ரகசியத் தகவல்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கிடைத்தன.

இந்த விவகாரத்தில், அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரும் கூடுதல் டிஜிபியுமான அருண், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தும் வகையில் 50க்கு மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் அமைச்சர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரு சில அதிகாரிகளும் ஊழியர்களும் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பத்திரப் பதிவகங்களில் லஞ்சப் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தயாராக இருந்த தனிப்படைக் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் ரூ.2.10 லட்சமும் சென்னை விருகம்பாக்கத்தில் ரூ.1.70 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. பல ஊர்களில் சிறு சிறு தொகைகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

லஞ்சப் பணம் அதிகளவில் கைமாறும் இடங்களான பத்திரப் பதிவு அலுவலகங்களில், இப்போது நடத்தப்பட்ட சோதனையில் மிகச் சிறிய அளவிலான தொகையே கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், இதுபோன்ற லஞ்சப் பணம் பத்திர எழுத்தர்கள், தரகர்கள் மூலம் பத்திரம் எழுதுவதற்கான கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படுதல் உள்ளிட்ட பல வழிகளில் பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் வாங்கும் பத்திரப் பதிவு அதிகாரிகள், தங்கள் பணி நாள் முழுதும் வசூலித்த கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தைத் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் சொத்தாகவோ நகையாகவோ மாற்றி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில், பத்திர எழுத்தர்கள் பலர், பத்திரம் எழுதுவதற்கான அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் பன்மடங்கு வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கான ரசீதுகள் எதுவும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. பத்திரப் பதிவு அலுவலகத்தில் சோதனையிடுவதைக் காட்டிலும் லஞ்சத்திற்குத் துணைபோகும் பத்திர எழுத்தர்களிடமும் தரகர்களிடமும் சோதனை மேற்கொண்டால், கோடிக்கணக்கான கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்படலாம் என்கின்றனர் பொதுமக்கள்.

குறிப்புச் சொற்கள்