தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோப்புப் படம்: தினமலர்

03 Nov 2026 - 4:09 pm

2 mins read

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம், இணையவழிப் பணப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலர்கள் எவ்விதமான பரிசுகளையோ லஞ்சமோ பெறக்கூடாது என மாநில அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சப்பணம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் ஏறக்குறைய நான்கு மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கணக்கில் வராத ரூ.6,79,700 பறிமுதல் செய்யப்பட்டது. சொத்து விற்பனையாளர், நிலத்தரகர், விவசாயி ஒருவரிடமிருந்து இந்த ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சார்பதிவாளர் முருகேசன் உள்ளிட்டோரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

‘கூகல் பே’ மூலம் லட்சக்கணக்கில் பரிவர்த்தனை

திருப்பூர் மாவட்டம் அவிநாசி-சேவூர் சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகக் கதவுகள் பூட்டப்பட்டு, அங்கிருந்த அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், நான்கு அதிகாரிகளின் ‘ஜிபே’ கணக்குகள் மூலம் ரூ.6.88 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது அம்பலமானது. இடைத்தரகர் ஒருவரிடமிருந்து ரூ.11,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு, கணக்கில் வராத ரூ.15,000 கைப்பற்றப்பட்டதுடன், கைப்பேசிப் பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

பண்டிகைக் காலத்தையொட்டி, பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு ஏற்கெனவே எச்சிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது இரண்டாவது முறையாக சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்