சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தமிழ் அழிய வேண்டும் எனக் கூறிய தந்தை பெரியாரை கொள்கைத் தலைவராக அறிவித்ததால்தான் தாம் விஜய்யை ஏற்றுக்கொள்ளவில்லை என சீமான் கூறியுள்ளார்.
இந்தியாவில் மொழி அடிப்படையில் தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக அவர் சென்னையில் நடைபெற்ற ‘எது நமக்கான அரசியல்’ என்ற கருத்தரங்கில் பேசும்போது குறிப்பிட்டார்.
“விஜய்யின் கோட்பாடு வேறாக உள்ளது. எங்களது கோட்பாடு வேறாக உள்ளது. மேலும் தமிழ் மொழியை ஒழிக்க வேண்டும் எனப் பேசியவர் பெரியார். அப்படிப் பேசியவர் வேறு எந்தச் சேவையைச் செய்திருந்தாலும் எங்களுக்குத் தேவையில்லை.
“தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை வைத்துக்கொண்டு எனது கட்சிக் கொடியை முதலில் எடுத்துக்கொண்டனர். பின்னர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற எனது கொள்கை கோட்பாட்டை எடுத்தனர். இப்படி எல்லாமே என்னுடைய கட்சியில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் பெரியாரை தனது கொள்கைத் தலைவராக தமிழக வெற்றிக் கழகம் கூறுகிறது.
“பாஜகவை தமிழகத்துக்குள் நுழையவிட மாட்டோம் எனத் திமுகவினர் கூறி வருகிறார்கள். ஆனால், பாஜக, திமுக ஆகிய இரண்டுமே வேண்டாம் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருந்தால் பிரதமர் வரும்போது கறுப்புக் கொடி காட்டுவது, ஆளும்கட்சியாக இருந்தால் பிரதமர் வரும்போது வெள்ளைக் கொடி காட்டுவதுதான் இவர்கள் செய்து வரும் வேலை,” என்றார் சீமான்.