ஒரே மேடையில் கைகுலுக்க உள்ள விஜய், திருமாவளவன்

2 mins read
63d8f62c-ffd0-4651-97f1-874cb5e528c0
திருமாவளவன் (இடது), விஜய். - படம்: ஊடகம்

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனும் விஜய்யும் ஒரே மேடையை பகிர்ந்துகொள்ள உள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாகி உள்ளது.

சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி தனியார் வார இதழ் ஒன்று புத்தக வெளியீட்டு விழாவை நடத்த உள்ளது.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் ஒன்றாக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்பேத்கர் நினைவு நாளன்று நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவன் புத்தகத்தை வெளியிட அதனை விஜய் பெற்றுக்கொள்ள உள்ளார் எனக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் பேசியபோது, தங்களோடு கூட்டணி சேரும் கட்சிக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என அறிவித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

ஏற்கெனவே, திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் எனப் பேசியிருந்த காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோல் விசிகவின் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசியது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அவர்களது பேச்சால் திமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த வாரம் நடந்த மாநாட்டில் திமுகவை ஊழல் கபடதாரிகள் என கடுமையாக விமர்சித்திருந்த விஜய், திராவிட மாடல் அரசு என்று கூறி மக்கள் விரோத அரசைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் சரமாரியாகச் சாடினார்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், விஜய்யுடன் ஒரே மேடையை பகிர உள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்