சென்னை: எதிர்க்கட்சிகள் விரிக்கும் சதி வலையில் சிக்காமல், மக்கள் சேவையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் புதன்கிழமை (நவம்பர் 11) விஜய் தலைமையில் தவெக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆறு மாத ஆட்சியில் தவெக அரசு பெற்றுள்ள மக்கள் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாகக் கூறிய விஜய், தவறிழைக்கும் எம்எல்ஏக்கள் யாராக இருந்தாலும் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்தார்.
அரசு அதிகாரிகள் பணிகளுக்கு ஒத்துழைப்பதில்லை எனச் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களை முதல்வர் விஜய் தமது குறிப்பேட்டில் பதிவு செய்துகொண்டார்.
அதேநேரத்தில், முறைகேடுகளில் ஈடுபடும் எம்எல்ஏ-க்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என எச்சரித்த அவர், “உங்கள் சிறப்பான தொகுதிப் பணிகளே அடுத்த தேர்தலில் உங்களை மீண்டும் வேட்பாளராக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்த்து, எதிர்கால அரசியல் வாய்ப்பைத் தக்கவைக்கக் களத்தில் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ-க்களுக்குத் தீபாவளிப் பரிசாகப் பட்டு வேட்டி, சட்டைகள் வழங்கப்பட்டன.
அவர்களின் கடந்த ஆறு மாத காலச் செயல்பாடுகள் குறித்த ‘பணி அறிக்கையை’ விஜய் தனித்தனியாக ஆய்வு செய்தார். சர்ச்சைக்குரிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கூட்டத்தில் பங்கேற்றார்.
கனிமொழி, தாஹிரா உள்ளிட்ட பெண் எம்எல்ஏக்கள் முதல்வரைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே புறப்பட்டுச் சென்றனர்.
இதனிடையே, தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டதாக எழுந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ரூ.1,370 கோடி முதலீட்டுடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.
தவெக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் சர்ச்சைகளில் சிக்குவது அரசுக்குக் கடுமையான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மனு அளிக்க வந்தவரைத் தாக்கியதாகத் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு முறையற்ற குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதும் புகார்கள் எழுந்து பொதுமக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன. அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழலில் குதிரை பேரம் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இவற்றைக் கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவசரக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டது.
விடுதி வளாகத்தில் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் தவிர உதவியாளர்கள் உள்ளிட்ட எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
