திருவில்லிப்புத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அந்த வெள்ளத்தில் சிக்கித்தவித்த நூற்றுக்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இவர்கள் அருகில் உள்ள சிவகாசி, சத்திரப்பட்டி, ராஜபாளையம் பகுதிகளைச் சேர்ந்த ஊர்மக்கள் ஆவார்.
வெள்ளிக்கிழமை தீபாவளியை ஒட்டி விடுமுறை விடப்பட்டதால் ராக்காச்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கும் அங்குள்ள, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் வெளியூர் மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலர் அங்குள்ள அத்தி துண்டு ஓடை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தது.
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில், அந்தக் காட்டுப் பகுதியில் திடீரெனக் கனமழை பெய்தது. அதையடுத்து அங்குள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோயிலுக்குச் சென்றவர்கள் ஆற்றைக் கடந்து வரமுடியாமல் சிக்கிக் கொண்டனர். அதையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட ராஜபாளையம் தீயணைப்புத் துறை வீரர்கள், மூன்று மணி நேர போராட்டத்திற்குப்பின் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.

