திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.
தமிழகத்தை கடந்த 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஊழல், இயற்கை வளங்களைச் சூறையாடுவதில் இந்த இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுவதாக அவர் சாடினார்.
தமிழகத்தின் கடன் சுமை 10.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழக வரவுசெலவுத் திட்டத்தின்படி 3 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே இருக்கும் நிலையில், வட்டியாகவே 1 லட்சம் கோடிக்கு மேல் கட்ட வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள், தாதியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குச் சரியான ஊதியம் வழங்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை வைத்தே அரசு நடத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களான ஃபிரிட்ஜ், தாலிக்குத் தங்கம், எரிவாயு உருளை போன்றவை குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், ‘நோட்டுக்கு வாக்கை விற்றால், அது நாட்டுக்கு வேட்டு வைப்பதற்குச் சமம்’ என்று எச்சரித்தார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒன்றே என்றும் மக்கள் சரியான மாற்றத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

