அதிமுக ஒன்றிணைவதை பொறுத்திருந்து பாருங்கள்: சசிகலா

1 mins read
b00544d7-8b0e-43d9-9cb2-e66e673b901f
சசிகலா. - படம்: ஊடகம்

மதுரை: தமிழக மக்கள் திமுக அரசின் பிடியில் சிக்கித்தவிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த சசிகலா, யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்றும் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் முதல்வராக முடியும் என்றும் குறிப்பிட்டார்.

“எதிர்வரும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். அதற்கு முன்னதாக பிளவுபட்டுள்ள அதிமுக மீண்டும் ஒன்றிணையும்.

“ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டதால் பிரச்சினை எழவில்லை,” என்று குறிப்பிட்ட சசிகலா, தற்போது மூன்று அமைச்சர்கள் இணைந்து ஒரேயொரு துறையைக் கவனிப்பதாக விமர்சித்தார்.

“தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும். தற்போது அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திமுக ஆட்சியில் கட்சி சார்பான நிகழ்ச்சிகளை மட்டும்தான் சரியாக நடத்துகின்றனர்.

“அதிமுக ஒன்றிணைவதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடாது. அது உங்களுக்குத் தெரியும்,” என்றார் சசிகலா.

குறிப்புச் சொற்கள்