நீர் உறிஞ்சும் பூங்காக்கள்: உலகுக்கே வழிகாட்டும் சென்னை

5 mins read
a3540423-f6bd-48f0-aec6-a3de9d8debcb
மழைக்கால வெள்ளத்தைத் தடுக்க தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது, ‘ஸ்பாஞ்ச் பார்க்’ எனும் நீர் உறிஞ்சும் பூங்காக்கள். - படம்: சக்திவேல் பீமராஜா.
multi-img1 of 6

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ‘நீர் உறிஞ்சும் பூங்கா’க்கள், உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல் மொத்த உலகத்தின் பார்வையையும் ஈர்த்துள்ளன.

சென்னையில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், மழைக்கால வெள்ளத்தைத் தடுக்க தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது, ‘ஸ்பாஞ்ச் பார்க்’ எனும் நீர் உறிஞ்சும் பூங்காக்கள்.

இந்தப் பூங்காக்களுக்கும் நீர் மேலாண்மைக்கும் என்ன தொடர்பு?

இதுதான் உங்கள் கேள்வி எனில், ஜெர்மன் தொழில்நுட்பப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த நீர் உறிஞ்சம் பூங்காக்களை சென்னை மாநகராட்சிக்கு முதலில் அறிமுகப்படுத்திய நீரியல் மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மை நிபுணர் முனைவர் சக்திவேல் பீமராஜா, தமிழ் முரசிடம் கூறிய பல விவரங்கள் அதுகுறித்து தெளிவாகப் புரிய வைக்கும்.

இத்திட்டத்தால் வெள்ளநீரைத் தடுத்து, நீர் மேலாண்மையை சிறப்பாகக் கையாள முடியும் என்கிறார் அவர்.

தற்போது சென்னை மாநகராட்சியைப் பின்பற்றி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களும் இந்த நீர் உறிஞ்சும் பூங்காக்களை அமைக்க முன்வந்துள்ளன.

அந்த வகையில், தற்போது இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் நீர் உறிஞ்சும் பூங்காக்களை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார் சக்திவேல் பீமராஜா. அவர் சொல்வதைக் கேட்போம்.

‘‘இந்த நீர் உறிஞ்சும் பூங்காக்களை கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு அறிமுகப்படுத்தினேன். கொசஸ்தலை நகர்ப்புற மேலாண்மை திட்டத்தின்கீழ் இந்த நீர் உறிஞ்சும் பூங்காக்களை அமைக்க முடிவெடுத்தோம்.

“பொதுவாக சென்னையின் நிலப்பரப்பு கடல் மட்டத்தில் இருந்து நான்கைந்து மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதில் சென்னை மாநகராட்சி சம மட்டத்தில் இருக்கக்கூடிய பகுதியாக உள்ளது.

“இப்படியிருக்கும் பகுதியில் நாம் நகரக் கட்டமைப்பைத் திட்டமிடாமல் செய்துவிட்டோம். இயற்கையாக இருக்கும் நீர் அமைப்புகளையும் கால்வாய்களையும் மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டோம்.

“இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி பிரச்சினை ஏற்படுகிறது. அதேபோல் இருந்த நீர்நிலைகளின் கொள்ளளவும் குறைந்துபோனது. அதனை நாம் சரியாக பராமரிப்பு செய்யவில்லை. சில இடங்களில் ஆக்கிரமிப்பும் இருக்கிறது.

“இதுதவிர நகர்ப்புறப் பெருக்கம் அதிகமாக இருப்பதால் பூமிக்குள் தண்ணீர் இறங்கும் பரப்பளவும் 20 விழுக்காடு வரை குறைந்துவிட்டது. முன்பு மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி நின்று கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடி நீராக உள்ளே சென்றது. ஆனால், இன்றோ காங்கிரீட் சாலைகளால் தண்ணீர் உட்புகும் அளவு குறைந்துவிட்டது.

“இதனால் தண்ணீர் வெளிப்புறத்தில் தேங்கி வெள்ளமாக மாறுகிறது. இதனை குறைப்பதற்காக எங்கள் சிந்தனையில் உருவான திட்டமே நீர் உறிஞ்சும் பூங்காக்கள்,’’ என்று சக்திவேல் பீமராஜா இதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

“சென்னையில் மழை பெய்யும்போது மழைநீரானது முதலில் மழைநீர் கால்வாய் வழியாக முதன்மை கால்வாய்க்குச் செல்லும். பிறகு, அங்கிருந்து ஆறுகளுடன் கலந்து கடலில் சேரும்.

“இந்த நீரை கடலுக்குக் கடத்தாமல் சேமிக்க வேண்டும் என நினைத்தோம். ஏனெனில், நாம் நிறைய இடங்களில் நிலத்தடி நீரை நம்பியே இருக்கிறோம். நமக்கு ஓராண்டிலுள்ள 365 நாட்களில் 45 நாள்களே மழைப்பொழிவு இருக்கிறது.

“இனி புதியதாக ஏரிகளையோ குளங்களையோ உருவாக்க முடியாது. அதற்கான இட வசதிகள் இல்லை. அதேபோல் மழையும் முன்புபோல் பெய்யவில்லை. குறைவான நேரத்தில் அதிக மழை பொழிகிறது. இதனால் தண்ணீர் உள்ளிறங்க முடியாமல் தவிக்கிறது.

“அதனால் சாலைக்கு கீழோ அல்லது எங்கெல்லாம் திறந்தவெளி இருக்கிறதோ அதாவது பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், காலி இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் மழைநீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீராகக் கொண்டு போனால் வெள்ள மேலாண்மையை சிறப்பாகக் கையாள முடியும். அந்த நோக்கில் அமைக்கப்பட்டதே இந்த நீர் உறிஞ்சும் பூங்காக்கள்.

“இதன்படி ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி அமைப்பைக் (பிளாஸ்டிக்) கொண்டு, ஒரு பூங்கா அல்லது மைதானத்தின் கீழே தொட்டிபோல் தோண்டி உள்ளே அவற்றை அடுக்குகிறோம்.

“இந்தப் பிளாஸ்டிக்கில் நீர் உள்ளே போகும்படியான ஓட்டைகள் கொண்ட வடிவமைப்பு இருக்கும். இது சதுப்பு நிலம் போல நிறைய நீரை உள்ளே தேக்கி வைத்துக்கொள்ளும் அமைப்பாகும். அப்படியாக இதனுள் மழைநீரைத் தடுத்து, தக்கவைத்து, நிலத்தடி நீரை அதிகரிக்க செய்கிறோம்.

“இது ஒரு குளம் போன்ற அமைப்புதான். அதாவது மழை பெய்யும்போது, குளமானது முதலில் மழை நீரை பூமிக்குள் உறிஞ்சி வைத்துக்கொள்ளும். பிறகு, தண்ணீர் அதிகமான பின் குளத்தின் மேற்பரப்பு நிரம்பும். இன்னும் அதிகமாகும்போது தண்ணீரை வெளியேற்றும்.

“இன்றைக்கு குளம் அமைக்க முடியாததால் நாமே பூமிக்கு அடியில் தொழில்நுட்ப உதவியுடன் ஒரு குளத்தை உருவாக்குகிறோம். அவ்வளவுதான். இந்த ஜெர்மன் தொழில்நுட்ப மறுசுழற்சி நெகிழி, அறவே கரிமம் (ஜீரோ கார்பன்) கொண்டது. பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாது. அதேநேரம் நிறைய பலனைக் கொடுக்கும்.

“தற்போது இந்தத் திட்டத்தை சென்னை மாநகராட்சி நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருப்பதால் சென்னை மாநகராட்சியின் இந்தத் திட்டம் நாடு முழுவதும் சென்றுள்ளது,” என்றார் திரு சக்திவேல் பீமராஜா.

இந்த நீர் உறிஞ்சும் பூங்காக்களை சென்னையில் மட்டும் 770 இடங்களில் அமைக்கச் சொல்லி தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியதாம். அதனுடன் எட்டு மைதானங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது 770 இடங்களிலும் 8 மைதானங்களின் அடியிலும் அமைத்துவிட்டதாகவும் இவை சுமார் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நிலத்தடி நீரை சேமிக்கக்கூடிய நீர் உறிஞ்சும் பூங்காக்களாக உருப்பெற்றுள்ளதாகவும் சொல்கிறார்.

சென்னையில் ஆண்டுக்கு சராசரியாக 1,250 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. சென்னையின் பெருநகர பரப்பளவு 428 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த சதுர கிலோ மீட்டரை, 1,250 மில்லி மீட்டரால் பெருக்கினால் கோடிக்கணக்கான லிட்டர் நீர் நமக்குக் கிடைக்கும். கூடவே வெள்ளப் பாதிப்பையும் குறைக்கலாம்.

இது தவிர, நாங்கள் சாலைகளிலும் நீர் உறிஞ்சும் அமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். இதன்மூலம் சாலையில் தேங்கும் மழைநீரை அங்கேயே சிறிதாக ‘ஸ்பாஞ்ச்’ அமைத்து ‘ரீசார்ஜ்’ செய்கிறோம்.

“இந்த நீர் உறிஞ்சும் பூங்கா முறையை நாம்தான் முதலில் கண்டறிந்தோம். இப்போது நாம் ஜெர்மனிக்கே சொல்லிக் கொடுக்கிறோம். இந்த வெள்ளத் தடுப்புத் தீர்வை ஜெர்மன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் தென் அமெரிக்க நாடுகளும் கிழக்கு ஆசிய நாடுகளும் நம்மிடம் கேட்டு பின்பற்றி வருகின்றன,” என்கிறார் சக்திவேல் பீமராஜா.

குறிப்புச் சொற்கள்