நீலகிரி: தேசப்பற்றோடு ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பாராட்டினார்.
“’ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கை மிகச் சிறப்பாக இருந்தது. அதை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்ட பேரணி மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தப்பட்டது.
“ஆனால், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லுார் ராஜு, இதுகுறித்து கருத்து சொல்வதாகக் கூறி, தேவையற்ற கருத்துகளைப் பேசியுள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை,” என்றார் ஸ்டாலின்.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் எனத் தேர்தலுக்கு முன்பு திமுக வாக்குறுதி அளித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது பொள்ளாச்சி வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு, திமுக நல்லாட்சிக்கு சாட்சியாக அமைந்துள்ளது என்றார்.
ஆனால், இந்தத் தீர்ப்புக்கு அதிமுகதான் காரணம் என்று கூறி, அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதாகச் சாடினார்.
“அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த பிரச்சினை இது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க, நானும் திமுகவும் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். ஆனாலும், பழனிசாமி பச்சையாகப் பொய் பேசுகிறார்,” என்று விமர்சித்தார் ஸ்டாலின்.
பொள்ளாச்சி வழக்கைப் போல், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளித் திடலில், நீலகிரி தொகுதி எம்பியான ராஜாவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார் திரு ஸ்டாலின்.
அப்போது, கோடைக்கால விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவர், சிறுமியர், விளையாட்டு வீரர்களிடம் உரையாடிய பின்னர் அவர் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

