சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
“நடிகர் விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கியுள்ளார். அதற்குள் ஆட்சியைப் பிடிப்பேன் என்றும் மத்திய அரசை விரட்டியடிப்போம் என்று சொல்வதும் வேடிக்கையாக உள்ளது.
“பாஜக, அதிமுக கூட்டணியை பொருந்தாக் கூட்டணி என்று விமர்சிக்கிறார்கள். உண்மையில், இது திமுகவுக்குப் பொருந்தாத கூட்டணி. திமுக ஆட்சி முடிவடைய இன்னும் ஓராண்டுக் காலம் உள்ளது. அதற்குள் மக்கள் அளிக்க உள்ள தீர்ப்பை யாராலும் மாற்ற இயலாது,” என்றார் நயினார் நாகேந்திரன்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் நீடித்து வருகின்றனர் என்றும் அவர்கள் ஓரங்கட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வந்தார். எனவேதான் மற்ற தலைவர்களை அழைக்கவில்லை.
“திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டணி என்கிறார் தவெக தலைவர் விஜய். ஆதாரம் இன்றி இவ்வாறு அவர் கூறுவதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை,” என்றும் நயினார் நாகேந்திரன் மேலும் கூறினார்.