அமைச்சரவையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவோம்: திருமாவளவன்

அமைச்சரவையிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவோம்: திருமாவளவன்

கோப்புப் படம்: ஏஎன்ஐ

14 Jun 2026 - 7:21 pm

1 mins read

சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒரே காரணத்தினால் தவெகவுடன், விசிக கூட்டணியில் இருப்பதாக அர்த்தமல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அமைச்சரவையில் இருந்து வெளியேறக்கூடிய சூழல் ஏற்படலாம் என்றும் நேர்காணலில் தெரிவித்திருப்பது தவெக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக-விசிக கூட்டணி இன்னும் உருவாகவில்லை என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று விசிகவும் கூட்டணி இல்லாமல் விலகியிருந்தே அமைச்சரவையில் தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்த ஆதரவுக்கு வெகுமதியாகவே தவெக அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள திருமாவளவன், தன்னைப் பற்றிய சில விமர்சனங்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரவையில் இருந்தாலும் நாங்கள் விலகி இருக்கக்கூடாதா? தவெகவின் சந்தேகத்தை போக்குவதற்காகவே நாங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோம். இடதுசாரிகளும் வெளியே நிற்கிறார்கள். நானும் வெளியே நிற்கிறேன். எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை ஏற்படலாம்,” என்றார் திருமாவளவன்.

எந்த நேரத்திலும் தவெக தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விசிக வெளியே வரமுடியும் என்றும் அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்டோம் என்ற காரணத்தினாலேயே, தவெக கூட்டணியில் விசிக சேர்ந்துவிட்டதாகக் கருத இயலாது என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தி உள்ளார்.

“இன்னும் கூட்டணியை உருவாக்கிக் கொள்ளவில்லை. இதுதான் உண்மை,” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

அவரது இந்த நேர்காணல், தவெகவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
திருமாவளவன்தவெகஅமைச்சரவைவிசிகதிமுக