சென்னை: கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.
கீழடி ஆய்வு அறிக்கையைத் தயார்செய்தது இவர்தான். இந்த அறிக்கையைத்தான் மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக அண்மையில் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா, தற்போது நொய்டாவில் உள்ள தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன். மத்திய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்,” என தமது ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
திருத்த வேண்டியது கீழடி அறிக்கையை அல்ல, சில உள்ளங்களைத்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழினம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அனைத்துத் தடைகளையும் எதிர்த்துப் போராடி வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அறிவியல் துணையால் நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள்.
தொடர்புடைய செய்திகள்
“மதுரை வீரகனூரில், திமுக மாணவர் அணி சார்பில் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்துவோம், அவர்களைத் திருத்துவோம்,” என்றும் தமது அறிக்கையில் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.
கீழடி அகழாய்வுப் பணிகள் தொடர்பாக மத்திய அரசிடம் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தது தமிழக அரசு.
இந்நிலையில், அந்த ஆய்வறிக்கை தொடர்பாக கூடுதல் விவரங்களை அளிக்குமாறு மத்திய அரசு கோரியிருப்பதாகத் தகவல் வெளியானது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த தமிழக அரசு, தமிழர் பெருமையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை எனச் சாடியது.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், முறையாக ஆய்வு நடைபெற்றிருந்தால், எத்தனை தகவல்களைக் கேட்டாலும் அதைத் தருவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னதாக, கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மதுரை வீரகனூரில் திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 18ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.