திருச்சி: கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது வழக்கு தொடுப்பதில் தமிழக அரசுக்கு ஏன் தயக்கம் என்றும் தவெகவைக் கண்டு தமிழக அரசு அஞ்சுகிறதா என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவத்தில் தமிழகக் காவல்துறை காட்டும் மெத்தனம் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“இச்சம்பவம் தொடர்பாக ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய என்ன முகாந்திரம் இருக்கிறது. அந்த முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை?
“எல்லோரும் சமம் என்று சொல்லும்போது அந்தக் கட்சியில் சம்பந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள், அலட்சியமாக இருந்தவர்கள், இந்த உயிரிழப்பிற்கு காரணமான நிலைப்பாட்டை எடுத்தவர்கள், கால தாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜய்யும்தானே வருகிறார். அவர் மீது வழக்கு தொடுப்பதற்குத் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?
“இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. விஜய்க்கும் திமுகவுக்கும் இடையே ரகசியத் தொடர்பு உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, அனைவர் மீதும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் திருமாவளவன்.
அவரது இக்கருத்து திமுக வட்டாரங்களில் எதிர்ப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.