நீரின்றி அமையாது உலகு. நீர் வளம் இன்றி ஒரு நாட்டின் வளர்ச்சியும் சாத்தியமற்றதாகிவிடுகிறது.
சிற்றூர்கள் முதல் இந்தியாவின் ஓர் அங்கமாக உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் இது பொருந்தும். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் நீர்ப்பங்கீடு தொடர்பாக நிலவும் சிக்கல்களால் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல் தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது சராசரியாகவோ மழைப்பொழிவு பதிவாகிறது. எனினும், தமிழக நீர்வளம் செழிப்பாக உள்ளதா என்றால் அரசு அதிகாரிகள் உதட்டைப் பிதுக்குகிறார்கள்.
தமிழகத்தில், ஆண்டு முழுவதும் வற்றாத ஆறு என்று ஏதுமில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேற்பரப்பு நீரை நம்பி உள்ள 24 லட்சம் ஹெக்டர் விளைநிலங்கள்:
தமிழகத்தில் 17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்த்தேக்கங்கள், 49,480 பாசனக்குளங்கள் (தனியார் குளங்கள் உட்பட) உள்ளதாக வினவு இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் மூலம் 46,540 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் கிடைப்பதாக அரசுத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஒரு கன மீட்டர் நீர் =1,000 லிட்டர்).
இதில் சரிபாதி நீரானது (நிலத்தடி நீர் கசிவுக்கும், அதிக வெப்பத்தால் நீராவியாவது போக) நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது. எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது 24,864 மில்லியன் கனமீட்டர் மட்டுமே என்கிறார்கள் நீர்வள நிபுணர்கள்.
தொடர்புடைய செய்திகள்
மாநிலம் முழுவதும் 24 லட்சம் ஹெக்டர் விளைநிலங்கள் பாசனத்துக்குப் பெரும்பாலும் இந்த மேற்பரப்பு நீரை மட்டுமே நம்பி உள்ளன.
நிலத்தடி நீர்வளமாக தமிழகத்தில் இருப்பது 22,423 மில்லியன் கன மீட்டர் என்பதும் நிபுணர்கள் கூறும் கணக்காக உள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக இதில் 60% அளவு (13,558 மி.க.மீ) நீரை ஏற்கெனவே பயன்படுத்தி விட்டதால், 40% அதாவது, 8,875 மி.க.மீ மட்டுமே மிச்சம் மீதியாக உள்ளது.
நதிகள் சீரமைப்பு கழகம்:
எனவே, நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த தமிழக அரசு, கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாத்தல், நதிகள் சீரமைப்பு கழகத்தை உருவாக்கியது.
பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரித்தல், புதிய பாசன ஆதாரங்களை மேம்படுத்தல், நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளைப் பராமரித்தல், சாத்தியமான பாசனத் திட்டங்களை ஆராய்ந்து மதிப்பிட்டுக் கண்டறிதல் என்று இந்தக் கழகம் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுத்தி வருகிறது.
அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலத்தடி நீர்:
தென் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலம் என்கிறார் முனைவர் ஜே.சுகுமாரன்.
நீர்வள மேம்பாட்டிற்கு நூதனத் திட்டமிடலே இன்றைய தேவை என்றும் இவர் வலியுறுத்துகிறார்.
தமிழகத்தின் நீர் தேவை 2050ல், 57,725 மி.க.மீ. ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிடுபவர், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டதோடு, சுமார் 75% நீர் குடிக்கவே லாயக்கற்றதாக உள்ளது என்றும் கட்டுரை ஒன்றில் சுகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழகத்தில் 40,000 ஏரிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 85 லட்சம் ஏக்கர் பகுதி, பாசன வசதி இல்லாமல் வானம் பார்த்த பூமியாக உள்ளது.
“ஆற்று மணல் கொள்ளை காரணமாக ஏற்படும் கட்டாந்தரையால் நீர் விரைந்து ஓடிவிடுகிறது. ஆற்றோரப் பகுதியில் வசிப்பவர்களுக்குக்கூட நிலத்தடி நீர் கிடைப்பதில்லை,” என்று சுட்டிக்காட்டுகிறார் முனைவர் சுகுமாரன்.
தேசிய தண்ணீர்க் கொள்கையை விமர்சிக்கும் நல்லகண்ணு:
நதிகள் இணைப்பின் மூலம் இந்தியாவின் நீர்வளத்தை அதிகரிக்கலாம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். ஆனால், காவிரி நீரைப் பெறுவதற்கே தமிழகம் அல்லாட வேண்டியுள்ளது இன்னொரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், கங்கை - காவிரி இணைப்பு சாத்தியமில்லை என்று கூறப்பட்டாலும், ஒடிசாவில் உள்ள மகாநதியை, தென் இந்திய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி ஆகியவற்றுடன் இணைக்க முடியும் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தாம் எழுதிய, ‘தமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய, தேசிய தண்ணீர்க் கொள்கை 2012 என்பது நீர்நிலைகளையும் நிலத்தடி நீர் நிரம்பிய செழிப்பான நிலங்களையும் தனியார் ஆதிக்கத்துக்கு விட்டுவிட மறைமுகமாகத் தீட்டப்படும் திட்டம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஒரு பிரிவினர் அவரது கருத்தை ஆதரித்தாலும், நவீனத்துவத்தின் உதவியுடன்தான் இயற்கை வளங்களைப் பெருக்க முடியும் என்பது மற்றொரு பிரிவின் வாதமாக உள்ளது.
முன்னேற்றம் காணாத மூன்று வகை பாசனத் திட்டங்கள்:
நகர்ப்புறமயமாவது அதிகரிப்பதால் விவசாயத்துக்கு குறைவான நீரே தேவைப்படும் என்று கூறப்படுவதை ஒருசிலர் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இந்த சிந்தனை தமிழகத்தில் விவசாய வளர்ச்சியை முற்றிலுமாக சீரழித்துவிடும் என்ற கவலையும் தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் இடையே நிலவுகிறது.
தமிழகத்தில் ஒரு காலத்தில் கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்று வகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.
ஆனால், பாசனத் திட்டங்களில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படாத நிலையில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, கூடுதலாக 21.5 லட்சம் ஏக்கர் என்ற அளவில் மட்டுமே பாசனப்பரப்பு தமிழகத்தில் விரிவடைந்துள்ளது.
மழைநீர் சேகரிப்புத் திட்டம்:
தமிழகத்தின் நீர்வளமும்– விவசாயமும் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்ற கவலை அனைவருக்கும் உள்ளது.
ஆண்டுதோறும் இரு பருவ மழைக் காலங்களின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மில்லி மீட்டர் ஆகும்.
வளர்ந்து வரும் தமிழக மக்கள் தொகை, தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப இயற்கை வளங்களைப் பெருக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அப்போதுதான் எதிர்காலத் தேவைகளை ஈடுகட்ட இயலும்.
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அதில் உயர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதால் அதன் மூலம் கிட்டும் பலன் முழுமையாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆறு, ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களைப் பாதுகாக்க பொதுமக்கள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள் என்று தினமணி ஊடகத்தில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்புமிக்க மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டது, சட்டவிரோத மணல் குவாரிகள், வனச் சுற்றுலாத் தளங்களை அமைப்பது மற்றும் காடு அழிப்பு நடவடிக்கைகள் எனப் பல காரணங்களால் நிலத்தடி நீர்வளம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயம் மட்டும் சீரழிந்து போகாமல், நீர் வளத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலான துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா, மருத்துவம், சுகாதாரம், தொழில்துறை உள்ளிட்ட துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளால் தமிழகத்தின் பொருளியலும் சரிவு காண்பதாக நிபுணர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீரின்றி அமையாது உலகு - புரிந்துகொள்வோம்.