சென்னை: ஓடுபாதையில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க பயணி ஒருவர் மேற்கொண்ட முயற்சியால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்த விமானம், சென்னையில் இருந்து மேற்கு வங்கத்தின் துர்காபூருக்குச் செல்லவிருந்தது.
அனைத்து சோதனைகளும் முடிந்து, புறப்படக் காத்திருந்த அந்த விமானத்தில் 158 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பத் தயாரானபோது, அதன் அவசரகால கதவு திறக்கப்பட்டதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை நிறுத்தினர்.
விமானத்தின் அவசரகால இருக்கையில் அமர்ந்திருந்த இளையர் ஒருவர்தான் அருகே இருந்த கதவைத் திறக்க முயற்சி செய்தார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விரைந்து சென்று விமானத்துக்குள் நுழைந்து அந்தப் பயணியைக் கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ஐஐடி கல்வி நிலையத்தில் ஆராய்ச்சி கல்வி மேற்கொண்டுள்ளதும் தெரியவந்தது.
விசாரணையின்போது, கவனக்குறைவால் தமது கைபட்டு விமானத்தின் அவசரகால பொத்தானை அழுத்திவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், இந்த விளக்கத்தை முதலில் ஏற்காத அதிகாரிகள், அவரது பயணத்தை ரத்து செய்து, விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தீவிர விசாரணைக்குப் பிறகு, நடந்த சம்பவம் குறித்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அந்த இளையர் விடுவிக்கப்பட்டதாக ஏசியாநெட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து, அக்குறிப்பிட்ட விமானம் ஒரு மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.