ஜூன் ஒன்றாம் தேதி மலேசியாவில் கோழி ஏற்றுமதி தடை நடப்புக்கு வரும் முன்னர், கோழி ஏற்றுமதி நிறுவனங்கள் முடிந்தவரை அதிகமான கோழிகளை இங்கு வேக வேகமாக அனுப்பி வருகின்றன.
மலேசிய அரசாங்கத்தின் அந்த திடீர் அறிவிப்பை தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய மலேசிய ஏற்றுமதி நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள் போன்றவை கூறின.
தங்கள் இருப்பில் உள்ள கோழிகளை முடிந்த அளவுக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி வருவதாக அவை குறிப்பிட்டன.
சில கோழிப் பண்ணைகள் இரவும் பகலும் வேலை செய்து, கூடுதல் லாரிகளை ஏற்பாடு செய்து அனுப்பி வருகின்றன.
இங்கு கொண்டுவரப்படும் உயிர் கோழிகளை துவாஸ் சோதனைச்சாவடியில் சோதிப்பதற்கான நேரத்தை கால்நடை மருத்துவச் சேவை கூட்டி இருக்கிறது.
மே 25 தொடங்கி 31ஆம் தேதி வரை அது கூடுதல் நேரம் செயல்படும்.
அதே வேளையில் சிங்கப்பூரில் உறைய வைக்காத கோழிகளை அதிகமானவர்கள் வாங்கி வருகின்றனர். பேரங்காடிகளில் கோழிகள் மளமளவென்று விற்று முடிந்துவிட்டன.
சிங்கப்பூரில் கோழி விநியோகிப்பைச் சமாளிக்க தொழில் நிறுவனங்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
தனது விநியோகச் சங்கிலிகளின் மூலம் கூடுதல் கோழிகளை இறக்குமதி செய்ய தொழில்துறை ஏற்பாடு செய்வதாக அமைப்பு குறிப்பிட்டது.
கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்து விலைகள் சீராகும் வரை அவற்றின் ஏற்றுமதியைத் தற்காலிகமாய் நிறுத்துவதாக மலேசியா சென்ற திங்கட்கிழமை அறிவித்தது.
கோழிகளின் எண்ணிக்கையையும் அவற்றின் விலையையும் சில நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் மலேசிய அரசாங்கம் அதை விசாரித்து வருவதாகலும் சில செய்திகள் கூறியுள்ளன.
ஆனால் ஊழியர் பற்றாக்குறை, விலை உயர்வு, நோய்கள், மோசமான பருவநிலை ஆகியவற்றால் கோழிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.

