தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் தொடர்பில் ஆசியானின் நிலைப்பாட்டில் உறுதி: பிரதமர் வோங்

2 mins read
5dc78c8d-b2ae-430b-b8e3-c3183c4a90dc
வாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார். - படம்: எஸ்பிஎச் மீடியா

மியன்மாரில் நடக்கும் பூசல்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதுபோனால் அந்நாட்டுடனான உறவு குறித்த ஆசியானின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.

மியன்மாரில் நிலைமை இன்னும் மோசமடைந்துதான் வருகிறது என்று ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கண்டித்துப் பேசிய பிரதமர், அதனால் வழக்கமான உறவுகளை நிலைநாட்டி வரமுடியாது என்று சொன்னார்.

அந்த நிலைப்பாட்டில் அனைத்து உறுப்பு நாடுகளும் உறுதியாக இருக்கவேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் ஆசியான் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆசியானின் ஒற்றுமையே உறுப்பு நாடுகளுக்கிடையே நடக்கும் சவால்களை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதை வைத்துதான் சீர்தூக்கிப் பார்க்கப்படும் என்று கூறிய பிரதமர், ஆசியானின் நிலைப்பாடான ஐந்து அம்ச உடன்படிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும் என்றார். 

2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியன்மார் ராணுவம், அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து, ஆசியானின் உச்சநிலை மாநாடுகளிலும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் அரசியல் சாராப் பேராளர்களை மட்டும் கலந்துகொள்ள ஆசியான் அனுமதித்தது.

ஆனால், மியன்மாரின் ராணுவத் தலைவர்கள் அதற்கு இணங்காமல் கூட்டங்களைப் புறக்கணித்து வந்தனர்.

இந்நிலையில், முதன்முறையாக அந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக மியன்மார் ராணுவம், வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரியை லாவோசுக்கு அனுப்பியுள்ளது.

வெளியுறவு அமைச்சின் நிரந்தரச் செயலாளரான திரு ஆங் கியாவ் மோ, கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பலதரப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதல் மியன்மார் உயர்மட்ட அதிகாரி.

அண்மைக்காலமாக சண்டைகளில் தோல்வி கண்டுவந்த மியன்மார் ராணுவம் இரு வாரங்களுக்கு முன்னர் அதன் எதிரிகளுக்கு அமைதிக்கான அழைப்பை விடுத்துள்ளது.

ஆசியான் பங்காளித்துவ நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், மியன்மாரில் சண்டை நிறுத்தத்துக்கும் அரசியல் கைதிகளை சிறையிலிருந்து விடுவிக்கவும் எதிர்த்தரப்புகளுடன் கலந்தாலோசிக்கவும் ராணுவத்தை கடுமையாக வலியுறுத்த இருப்பதாக கிழக்காசியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேனியல் கிரிடன்பர்க் கூறினார்.

ஆசியானின் அடுத்த தலைமைத்துவ நாடாகப் பொறுப்பேற்கவிருக்கும் மலேசியா, மியன்மாரின் பிரதிநிதித்துவத்தை வரவேற்றது.

மியன்மார் ஒத்துழைப்பை நல்குவதே நல்லது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசன் தெரிவித்தார்.

“ஆசியானின் அங்கமாக இருக்கும் மியன்மார், ஆசியானின் கொள்கைகளை மதித்து அதன்படி நடக்கவேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்