விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூரர்களின் வாக்குகளை வெல்ல ‘மாறிவரும் உலகம், புது அணி, மாறாத உறுதி - உங்களுக்காக மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்வோம்’ எனும் தலைப்பில் பொதுத் தேர்தல் 2025க்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது மக்கள் செயல் கட்சி.
அக்கட்சியின் தலைமைச் செயலாளரும், பிரதமரும் நிதியமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் மசெகவின் தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை (ஏப்ரல் 17) காலை வெளியிட்டார்
சிங்கப்பூரை ஆள்வதற்கு மீண்டும் மசெகவிற்கு வாய்ப்பளிப்பதன்மூலம் மக்கள் பெறவிருக்கும் பலன்களை ஏந்திவந்தது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் செயல் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் வோங், “ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் சிறப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டையும் சேவையையும் புதுப்பிப்பதற்கு மக்கள் செயல் கட்சி மீண்டும் உறுதிகொள்கிறது,” என்றார்.
சிங்கப்பூர் 60வது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடும் வேளையில் நடைபெறவிருக்கும் இப்பொதுத் தேர்தல், இதுவரை மக்கள் செயல் கட்சி நிறைவேற்றிய வாக்குறுதிகளின்மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் திரு வோங்.
கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள மக்கள் செயல் கட்சி புதிய தலைமைத்துவத்துடன் எதிர்கொள்ளும் முதல் பொதுத் தேர்தல் இது.
அக்கட்சிக்கு தலைமையேற்றிருக்கும் திரு வோங், ’‘சிங்கப்பூர் என்ற இந்த அதிசயம் கூடுமானவரை தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். உங்கள் எதிர்காலத்தோடு விளையாட மாட்டேன்,’‘ என்றார்.
மேம்பட்ட வேலைக்கான ஆதரவு முதல், விளையாட்டு, கலைகளுக்கான வாய்ப்பு வரை மசெக தேர்தல் அறிக்கை கூறுவது என்ன?
- மேம்பட்ட வேலை, சிறப்பான ஊதியம், கூடுதல் வாய்ப்புகள்
- உங்கள் கனவுகளை நனவாக்க கூடுதல் பாதைகள்
- பின்னடைவுகளிலிருந்து மீண்டெழ வலுவான பாதுகாப்பு அம்சங்கள்
- குறைந்த வருவாய் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம்
- வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்கக் கூடுதல் உதவி
- பெரிய குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு
- நியாயமான வேலைவாய்ப்புக்குக் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்
- ஓய்வுக்காலத்திற்குச் சிறந்த உறுதி
- பராமரிப்பாளர்களுக்கு மேம்பட்ட ஆதரவு
- மனநலனுக்கான ஆதரவை மேம்படுத்துதல்
- உடற்குறையுள்ளோருக்கு கூடுதல் மேம்பட்ட ஆதரவு
- கட்டுப்படியாகக்கூடிய விலையில் சுகாதரப் பராமரிப்புச் சேவைகள்
- புதிய சந்தைகளில் விரிவடைய நிறுவனங்களுக்கு உதவிக்கரம்
- கொள்கை வடிவமைப்பில் குடிமக்களின் பங்களிப்பை அதிகரித்தல்
- ரயில் பேருந்துச் சேவைகள் மேம்பாடு
- மேலும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் ஒற்றையர் உட்பட அனைவருக்குமான பொது வீடமைப்புத் திட்டம்

