சிங்கப்பூரில் 37,000 பேருக்குத் தடுப்பூசி

சிங்கப்பூரில் 37,000 பேருக்குத் தடுப்பூசி

3 mins read
a7c3a6e9-663b-4321-8fbf-334a17a6de23
கொவிட்-19 தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துகொள்வதற்காக சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி மையத்தில் நேற்று வரிசையில் காத்திருந்த விமானத்துறை ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விமான, கடல்துறை­க­ளைச் சேர்ந்த 37,000 முன்­க­ளப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடும் பணி நேற்று தொடங்­கியது.

அவர்­கள் அனை­வ­ருக்­கும் இரு மாதங்­க­ளுக்­குள் தடுப்­பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டு இருக்கிறது.

இவ்­வா­ரத்­திற்­குள் முதல் தடுப்­பூ­சி­யைப் பெற ஏறக்­கு­றைய 13,000 ஊழி­யர்­கள் முன்­ப­திவு செய்­து இருப்பதாகப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார்.

சாங்கி விமான நிலை­யத்­தின் நான்­காம் முனை­யத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள தடுப்­பூசி மையத்­திற்கு அமைச்­சர் ஓங் நேற்று வரு­கை­புரிந்­தார்.

கொரோனா நோய்ப் பர­வ­லால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், சிங்­கப்­பூ­ரின் விமா­னப் போக்­கு­வ­ரத்து மையத்தை மீட்­டு எ­டுப்­ப­தில் தடுப்­பூசி மிக முக்­கி­ய­மான நட­வ­டிக்கை என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

விமான, கடல் துறை­களில் குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­கை­யிலான ஊழி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் பட்­சத்­தில், சிங்­கப்­பூர் பாது­காப்­பா­னது என­வும் நம் மக்­கள் பிணைப்­பு­மிக்­க­வர்­கள் என­வும் மற்­ற­வர்­கள் அறிந்­து­கொள்­வர் என்று அமைச்­சர் கூறி­னார்.

"அது நமது மதிப்பை உயர்த்­தும் வகை­யில் பெரும் சாத­க­மாக அமை­யும்," என்று அவர் வலி­யுறுத்­திச் சொன்­னார்.

உல­கி­லேயே முதன்­மு­த­லில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட முதல் அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வரத்து நிறு­வ­ன­மாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் இருக்க முடி­யும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தின்­மூ­லம் சிங்­கப்­பூ­ரைப் பாது­காக்­க­லாம் என்ற அமைச்­சர் ஓங், சிங்­கப்­பூ­ரில் கிருமித்­தொற்று கட்­டுக்­குள் இருந்­தா­லும் வெளி­நா­டு­களில் அது காட்­டுத்தீ போல் பரவி வரு­கிறது என்­றும் சொன்­னார்.

"நமது 37,000 முன்­க­ளப் பணி­யா­ளர்­களும் எல்­லை­க­ளைக் காக்­கும் காவ­லர்­கள். ஏனெ­னில், எல்­லை­க­ளின் வழி­யாக கிரு­மித்­தொற்று எளி­தில் பர­வக்­கூ­டும்," என்­றார் அவர்.

அமைச்­சர் ஓங், சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் தலைமை நிர்­வாகி கோ சூன் ஃபோங், 'சேட்ஸ்' தலை­வரும் தலைமை நிர்­வாக அதி­காரி­யு­மான திரு அலெக்ஸ் ஹங்­கேட் ஆகி­யோ­ரும் நேற்று தடுப்­பூசி போட்டுக்­கொண்­ட­னர்.

நான்­காம் முனை­யத்­தில் உள்ள தடுப்­பூசி மையத்­தில் இப்­போது நாளொன்­றுக்கு 2,000 பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யும் என்­றும் அந்த எண்­ணிக்கை மேலும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்­றும் சிங்­கப்­பூர் பொது விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

கொரோனா தொற்று அபா­யம் அதி­க­முள்ள நாடு­களில் இருந்து பய­ணி­க­ளு­ட­னும் அவர்­க­ளின் பய­ணப்­பை­க­ளு­ட­னும் அவர்களுக்குத் தொடர்பு ஏற்படக்கூடும் என்­ப­தால், முதற்­கட்­ட­மாக, விமா­னச் சிப்­பந்தி­கள், துப்­பு­ர­வா­ளர்­கள், பாது­காப்­புப் பரி­சோ­த­கர்­கள், பய­ணப்பைகளைக் கையாள்­வோர் உட்­பட 20,000 முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்.

இத­னி­டையே, ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்­தில் கடல் துறை ஊழி­யர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­ப­டு­கிறது. அம்­மை­யத்­தால் ஒரு நாளைக்கு 1,000 பேரைக் கையாள இய­லும்.

இந்­நி­லை­யில், தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விரும்­பாத பணி­யா­ளர்­கள் குறித்­துக் கேட்­ட­தற்கு, தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காகச் சிலர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தயங்­கு­வ­தாக அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

ஆயி­னும், பெரும்­பான்­மை­யான ஊழி­யர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­வந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், "ஆகை­யால் விருப்­ப­முள்­ள­வர்­க­ளுக்கு முத­லில் தடுப்­பூசி நட­வ­டிக்­கை­யைத் தொடங்­கு­வோம். அத­னால் உந்­தப்­பட்டு இன்­னும் பலர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­வ­ரு­வர்," என்­றும் சொன்­னார்.

கடந்த நவம்­ப­ரில் தொடங்­கு­வதாக இருந்த ஹாங்­காங்-சிங்­கப்­பூர் இடை­யி­லான இரு­த­ரப்­புப் பயண ஏற்­பாடு, ஹாங்­காங்­கில் கிரு­மித்­தொற்று பாதிப்பு அதி­க­மா­னதை அடுத்து நிறுத்தி வைக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, அது எப்­போது தொடங்­கும் என உறு­தி­யாகக் கூற முடி­யாது என்று திரு ஓங் கூறி­யுள்­ளார்.

மற்ற நாடு­க­ளு­டன் இரு­த­ரப்­புப் பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்கு­வ­தைச் சிங்­கப்­பூர் தொடர்ந்து ஆராய்ந்து வரு­கிறது என்­றும் அவர் தெரி­வித்து இருக்­கி­றார்.

குறிப்புச் சொற்கள்