லாவோசின் மூத்த அரசாங்க அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தை சிங்கப்பூர் தொடங்க உள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.
சிங்கப்பூரின் வளர்ச்சி அனுபவத்தைப் பகிர்வதையும் சிறந்த செயல்பாட்டு முறைகளைப் பகிர்ந்துகொள்வதையும் அந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இருநாடுகளுக்கும் இடையில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தில் இதுவரை 17,000 லாவோஸ் அதிகாரிகள் பங்குபெற்றுள்ளனர். அவர்களில் லாவோசின் அதிபர் தொங்லூன் சிசுலித்தும் துணை அதிபர் பாணி யதொடுவும் அடங்குவர்.
சிங்கப்பூரும் லாவோசும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடுகள் என்று குறிப்பிட்ட திரு வோங், மனிதவளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாடு அக்டோபர் 11ஆம் தேதி முடிவடைந்தபின் பிரதமர் லாரன்ஸ் வோங், லாவோசுடனான தமது அதிகாரபூர்வ சந்திப்பைத் தொடங்கினார்.
அக்டோபர் 11ஆம் தேதி மாலை லாவோஸ் பிரதமர் அலுவலகத்தில் திரு வோங்குக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து லாவோஸ் பிரதமர் சொன்சாய் சிஃபண்டோனுடன் திரு வோங்கும் இருநாட்டு பேராளர்களும் சந்தித்துப் பேசினர்.
அதன்பிறகு திரு வோங்குக்கும் அவரது மனைவிக்கும் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் திரு சிஃபண்டோனும் திரு வோங்கும் பேசினர்.
இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவு குறித்து பேசிய திரு வோங், லுவாங் பிரபாங் போன்ற நகரங்களுக்கு சிங்கப்பூரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளதையும் சமூக, தொண்டூழியப் பணிகளுக்காக இளையர், மாணவர் குழுக்கள் வருவதையும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல் தலைநகர் வியந்தியனுக்கு ஸ்கூட் விமான சேவை வாரத்திற்கு மூன்று நாள்களிலிருந்து நான்கு நாள்களாக அதிகரிக்கும் தகவலை வரவேற்பதாகத் திரு வோங் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இயற்கையான சவால்கள் உள்ளன. லாவோஸ் நிலங்களுக்கு மத்தியில் சிக்கியிருப்பது போல், சிங்கப்பூர் கடல்களுக்கு மத்தியில் சிக்கியிருக்கிறது என்ற திரு வோங், நமது சவால்களை பலமாக மாற்ற இருதரப்பு மக்களுக்கும் பலன் பயக்கும் திட்டங்களில் ஈடுபடவேண்டும் என்றார்.
லாவோஸ்-தாய்லாந்து-மலேசியா-சிங்கப்பூர் எரிசக்தி ஒருங்கிணைப்புத் திட்டத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதைச் சுட்டிய பிரதமர், எரிசக்தி தொடர்புத்திறனும் மீள்திறனும் நம் பிரதான ஒத்துழைப்பு அம்சமாக இருக்கவேண்டும் என்றார்.
ஒட்டுமொத்த பாதுகாப்புக்காகவும் அவரவர் பசுமை உருமாற்றத்தை விரைவுபடுத்தவும் படிப்படியாக ஆசியான் எரிசக்தி கட்டமைப்பை அமைத்து வருவதை அவர் சுட்டினார்.
கடந்த ஜூலை மாதம் லாவோஸ் பிரதமர் சிங்கப்பூர் வந்திருந்தபோது கரியமில ஒத்துழைப்பு கையெழுத்தானதைத் தொடர்ந்து இருதரப்பு அதிகாரிகளும் செயல்பாட்டு உடன்பாட்டை அமைத்து வருகின்றனர்.
அது நடப்புக்கு வந்தால் சிங்கப்பூர் அதன் கரியமில இலக்கை அடைய வழிவகுக்கும் என்றும் லாவோசுக்குள் புதிய பசுமை முதலீடுகளை ஈர்க்க உந்துதல் தரும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் பேசிய லாவோஸ் பிரதமர் சிஃபண்டோன், அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் சிங்கப்பூருடன் ஒத்துழைக்க கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார்.
பசுமை எரிசக்தி, கல்வி, மனிதவள மேம்பாடு போன்றவற்றை ஒத்துழைப்புக்கான துறைகளாகச் சுட்டினார்.
ஆசியான் தலைமைத்துவத்தை லாவோஸ் ஏற்றிருந்த இந்த ஆண்டு சிங்கப்பூர் அதற்கு நல்கிய ஆதரவுக்கும் அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்துக்கு உதவிக்கரம் நீட்டியதற்கும் திரு சிஃபண்டோன் நன்றி தெரிவித்தார்.
அக்டோபர் 12ஆம் தேதி லாவோஸ் அதிபருடன் சந்திப்பு நடத்தியபின் சிங்கப்பூர் திரும்பினார் திரு வோங்.