உலக அரங்கில் ஆசியானின் குரல் மேலோங்க வேண்டும்: பிரதமர் வோங்

உலக அரங்கில் ஆசியானின் குரல் மேலோங்க வேண்டும்: பிரதமர் வோங்

3 mins read
752ede18-6dbc-45e3-bda0-3fe0b4530c83
லாவோஸ் பயணத்தின் முடிவில் பிரதமர் லாரன்ஸ் வோங் செய்தியாளர்களைச் சந்தித்தார். - படம்: எஸ்பிஎச் மீடியா

வட்டார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி உலக அரங்கில் ஆசியானின் குரல் ஓங்கி ஒலிப்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும் அதன் தேவை இதுவரை இல்லாத வகையில் தற்போது முக்கியமானது என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

தடைகளையும் தன்னைப்பேணித்தனத்தையும் பற்றிப் பல நாடுகள் பேசிவரும் வேளையில், இணைந்து பணியாற்றிக் கூடுதல் ஒத்துழைப்பு மூலம் பலன் அடையவேண்டும் என்றார் திரு வோங்.

முன்னேற்றத்திற்கு அப்படிப்பட்ட மாற்றுவழி இருக்கிறது என்பதை ஆசியானும் அதன் பங்காளித்துவ நாடுகளும் உலகிற்குக் காட்டவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்து நாடுகளை உள்ளடக்கிய தென்கிழக்காசிய அமைப்பும் அதன் பங்காளித்துவ நாடுகளும் வட்டார ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவது முக்கியம் என்றார் பிரதமர்.

தனித்து இயங்குவதைக் காட்டிலும் ஒருங்கிணைந்து செயல்படும் போக்கு, ஒவ்வொருவருக்கும் பலன் தரும் ஒத்துழைப்பு, தடையற்ற வர்த்தகம் போன்ற வழிகளில் பலன் பெறமுடியும் என்பதை ஆசியானும் அதன் பங்காளி நாடுகளும் உணர்த்தவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டையும் லாவோசுக்கான தமது அதிகாரபூர்வ பயணத்தையும் நிறைவுசெய்து சிங்கப்பூர் புறப்படுமுன் செய்தியாளர்களை திரு வோங் சந்தித்தார்.  

தென்கிழக்காசிய வட்டாரத்தின் நலனுக்காக, நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒரே அமைப்பாகச் சிந்திக்கவும் ஒருங்கிணைக்கவும் வகைசெய்யும் முக்கிய, ஆக்ககரமான அமைப்பாக ஆசியான் விளங்குகிறது என்று பிரதமர் பாராட்டினார். 

வேறோர் அரசியல் சூழலில், பனிப்போர் காலத்தில் தொடங்கப்பட்ட ஆசியான் அமைப்பு, மிக முக்கியப் பங்கை ஆற்றி வருகிறது என்றார் அவர். அத்தகைய அமைப்பு இல்லாவிட்டால் இவ்வட்டாரம் நெடுங்காலம் நீடிக்கும் சண்டை சச்சரவுகளில் சிக்கி, இன்றைய சூழல் மாறுபட்ட ஒன்றாக இருந்திருக்கும் என்றார் பிரதமர்.  

லாவோஸ் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
லாவோஸ் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: எஸ்பிஎச் மீடியா

கடந்த முப்பது ஆண்டுகளின் உலகமயமாதலுக்குப்பின் புதிய பனிப்போராகக் கருதப்படும் அரசியல் சண்டைகளும் போட்டிகளும் மிகுந்த அடுத்த கட்டத்தில் உள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். 

முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆசியான் வட்டார ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி உலக அரங்கில் அதன் தாக்கம் பெரிதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர். 

ஆசியான் மாநாட்டில், எதிர்காலம் குறித்த கவலை தலைவர்கள் மத்தியில் நிலவியதாகத் திரு வோங் தெரிவித்தார். வட்டார நாடுகளில் நிலவும் பதற்றம், சண்டையாக வெடிக்கக்கூடிய அம்சங்கள் போன்றவை கவலைக்குரியதாக உள்ளது என்று அவர் சொன்னார். 

மியன்மாரின் நிலை குறித்துப் பேசிய பிரதமர், ஆசியானோ மற்றெந்தத் தரப்போ சண்டை நிறுத்தத்தைக் கொண்டுவருவது எளிதானதன்று என்றார்.

இரு குழுக்களுக்குள்ளான வாழ்வா சாவா போராட்டத்தில் சண்டை நிறுத்தத்தைக் கொண்டுவருவது மியன்மாருக்கு மட்டுமே சாத்தியம் என்றும் அதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்றும் கூறிய திரு வோங், அதற்காக நாம் எதுவும் செய்யாமல் இருக்கக்கூடாது என்றார். 

ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கும் அமைதியான முறையில் தீர்வுகாண்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்றார் அவர். அத்தகைய முயற்சியில்தான் ஆசியான் இறங்கியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியை அறிய ஆசியான் பங்காளி நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

சவால்களுக்கு அப்பால் ஆசியான் வழங்கும் வாய்ப்புகள் குறித்தும் பேசிய அவர், எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாக இருப்பதாகக் கூறினார்.

ஆசியான் தொடர்ந்து ஒருங்கிணைப்புடன் செயல்படும் நிலையிலும் பங்காளிகளுடன் உறவுகளை வலுப்படுத்திவரும் சூழலிலும் புத்தாக்கமிக்க, நம்பிக்கைக்குரிய பல வாய்ப்புகள் உள்ளதாக திரு வோங் குறிப்பிட்டார். 

உலகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்வதை ஆசியாவே உறுதிசெய்கிறது என்றும் ஆசியானுக்கு அப்பாலுள்ள வட்டாரத்திலும் பல வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் சுட்டினார். 

உலகளாவிய நிலையில் முதலீட்டாளர்கள் ஆசியாவின் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். அதேபோல சிங்கப்பூர் வர்த்தகங்களும் ஆசியாவில் வெவ்வேறு வாய்ப்புகளால் பலன் பெற முடியும் என்று பிரதமர் நம்பிக்கையளித்தார்.  

இருப்பினும், உலகச் சூழல் நிலைத்தன்மையற்றதாக இருக்கும் பட்சத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் எந்தச் சூழலுக்கும் மனத்தளவில் திடமாக இருக்கத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

நீடித்த நிலைத்தன்மையுடன் எவ்வாறு வர்த்தகம் புரிவது என்று ஆராயும்படியும் புதிய அரசியல் சூழல்களுக்கும் தயாராக இருக்குமாறும் திரு வோங் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்