அதிபர் தேர்தல் களத்தில் குதிக்கும் மூத்த அமைச்சர் தர்மன்

மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம், வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

மக்கள் செயல் கட்சியிலிருந்தும் மூத்த அமைச்சர், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆகிய பொறுப்புகளிலிருந்தும் விலக எண்ணுவதாக திரு தர்மன், பிரதமர் லீ சியன் லூங்கிற்கு வியாழக்கிழமையன்று அனுப்பிய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டார்.

தற்போது 66 வயதாகும் திரு தர்மனின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட திரு லீ, சிங்கப்பூருக்கு அவர் ஆற்றிய மதிப்பிற்குரிய சேவைக்காக நன்றி தெரிவித்தார்.

அமைச்சரவையிலிருந்தும் கட்சியிலிருந்தும் திரு தர்மன் விலகுவது தமக்கும் தம் அணியினருக்கும் பேரிழப்பு எனக் குறிப்பிட்ட திரு லீ, அவரது தலைமைத்துவம், நுண்ணறிவு, மதியுரை ஆகியவற்றை இழக்கப் போகிறோம் என்று கூறினார்.

 ஜூலை ஏழாம் தேதி திரு தர்மனின் பதவி விலகல் நடப்புக்கு வரும்.

தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், இரண்டாவது தவணையாக அதிபர் பதவிக்காகப் போட்டியிடப்போவதில்லை என மே 29ஆம் தேதி அறிவித்ததையடுத்து திரு தர்மனின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதிபர் ஹலிமாவின் தவணைக்காலம் செப்டம்பர் 13ஆம் தேதியன்று முடிவடைகிறது. அதற்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராகத் தம்மை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டது திரு தர்மன் ஆவார். அவரைத் தவிர தற்போதைக்கு வேறு யாரும் தம்மை வேட்பாளராக அறிவிக்கவில்லை.

“மீண்டும் நிற்கப் போவதில்லை என அதிபர் ஹலிமா முடிவு செய்தால், நான் தேர்தலில் நிற்கும்படி பல்வேறு வாழ்க்கைமுறையைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் அண்மைக்காலமாகவே என்னை வேண்டிக்கொண்டது என்னை நெகிழவைத்தது,” என்றார் திரு தர்மன்.

திரு தர்மன், முதன்முதலாக நாடாளுமன்றத்தில் 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இணைந்தார். அதன் பின்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் அவர் நான்கு முறை வெற்றி கண்டு நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.

2019ஆம் ஆண்டு முதல் மூத்த அமைச்சராகவும் 2015ஆம் ஆண்டு முதல் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் 2011ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார் திரு தர்மன்.

துணைப்பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பதவிகளைத் தம் 22 ஆண்டு அரசியல் காலக்கட்டத்தில் திரு தர்மன் வகித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் திரு தர்மன், அதிக காலமாக சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் பணியாற்றினார். அந்தப் பதவியுடன், ‘ஜிஐசி’ இறையாண்மை செல்வ நிதியின் துணைத் தலைவர், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் அனைத்துலக ஆலோசனை மன்றத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை அவர் துறக்கிறார்.

அனைத்துலக மேடையிலும் தமது தலைமைத்துவத்தைக் காட்டிய திரு தர்மன், தலைசிறந்த பொருளியல் மற்றும் நிதிக் கொள்கை ஆய்வாளர்களை உள்ளடங்கிய சுயேச்சையான அனைத்துலக மன்றமான ‘குருப் ஆஃப் 30’ குழுமத்தின் தலைவராகச் செயல்பட்டிருந்தார்.

ஏப்ரல் 2017ஆம் ஆண்டு முதல் ‘குருப் ஆஃப் 20’  உலக நிதி நிர்வாகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளுக்கான குழுவுக்கும் தலைவராக உள்ளார். 

ஜூரோங் குழுத்தொகுதியில் திரு தர்மன் வகித்த பொறுப்புகளை அவருக்கு அடுத்து யார் வகிப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அவரது குழுத் தொகுதியில் சுகாதார அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், டாக்டர் டான் வூ மேங், திரு சியே யவ் சுவென், திரு ஷோன் ஹுவாங் ஆகியோர் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிறுபான்மை இனத்தவராக இருந்தாலும் அவர் பதவி விலகினால் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற தேவை, சட்டரீதியாக இல்லை. 

2017ஆம் ஆண்டில் திருவாட்டி ஹலிமா அதிபர் தேர்தலில் நிற்க முடிவு செய்தபோது, மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க நேரிட்டது. அப்போது தம் தொகுதியில் வேறொரு நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்க பிரதமர் லீயைக் கேட்பதாகச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!