வட்டாரப் பாதுகாப்பு நிலை உட்பட வெவ்வேறு வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து சிங்கப்பூரும் இந்தியாவும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன.
அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் இன்றி அமைதியான முறையில் தென் சீனக் கடல் விவகாரங்களைக் கையாளவேண்டும் என்பதை சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நம்புகின்றனர்.
வளர்ச்சியும் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும் அனைத்துலக சட்டத்துக்கு உடன்பட்டு அமைதித் தீர்வை நாடுகள் நாடவேண்டும் என்றும் இருநாட்டுத் தலைவர்களும் இந்தியப் பிரதமரின் அதிகாரத்துவப் பயணத்தின் முடிவில் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூருக்கு இருநாள் அதிகாரத்துவப் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை (செப்டம்பர் 5) மாலை நாடு திரும்பிய இந்தியப் பிரதமர் அடுத்த ஆண்டு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் வருகையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். பிரதமர் வோங்கையும் இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைத்துள்ளார் திரு மோடி.
அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் பயங்கரவாதம் அதிக அச்சுறுத்தலாக உள்ளது என்று இருநாட்டுத் தலைவர்களும் கூறினர்.
உலகளாவிய பயங்கரவாதத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக போராட இரு தலைவர்களும் வலுவாக உறுதிபூண்டனர்.
அத்துடன் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பயங்கரவாத்துக்கான நிதி ஆகியவற்றில் எஃப்ஏடிஎஃப் எனும் நிதி அமலாக்க செயற்குழுவின் பரிந்துரைகளின்படி அனைத்துலகத் தரத்தை கட்டிக்காப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
ஆசியான் அமைப்பின் முக்கியத்துவம் குறித்துக் கருத்துரைத்த திரு வோங்கும் திரு மோடியும், ஆசியானுடனான இந்தியாவின் முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தை மேலும் வலுவாக்க ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வட்டார அமைதிக்கு இந்தியாவின் கடப்பாட்டையும் ஒத்துழைப்பையும் இரு பிரதமர்களும் எடுத்துரைத்தனர்.
ஆசியானுக்கு நான்கு உறுப்பு நாடுகளைக் கொண்ட குவாட் அமைப்பின் ஆதரவை இரு தரப்பும் வரவேற்றன.

