சிங்கப்பூரும் இந்தியாவும் இணைந்து செய்யக்கூடியது இன்னும் ஏராளம் உள்ளது என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்நிலை வட்டமேசை உட்பட பல தளங்களின் மூலம் இரு நாடுகளுக்கும் பலன் தரும் அம்சங்கள் தொடர்ந்து மறுஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வரும் அதேவேளையில், இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு புதிய, முன்னோக்கிய திட்டங்களில் ஒத்துழைப்புக்கு வழி அமைக்கப்பட்டுள்ளது என்றார் அதிபர்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கப்பூர் பயணத்தின்போது இருநாடுகளும் முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்திற்கு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் புதிய பாதையில் உள்ளதாக அதிபர் தர்மன் கூறினார்.
தொழில்துறைக்கு ஏற்றவாறு தயார்நிலையில் இந்தியாவின் இளமையான மக்கள்தொகையை கொண்டிருக்க பயிற்சி, இந்தியாவின் பகுதி மின்கடத்தித் துறையை மேம்படுத்த ஒத்துழைப்பு, புதிய தலைமுறை தொழிற்பூங்காக்கள், பசுமை எரிசக்தித் துறையில் பங்காளித்துவத்தை வலுவாக்குவது போன்றவற்றை உதாரணமாக அதிபர் சுட்டினார்.
அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அதிபர் தர்மனுக்கு இந்திய அதிபர் திரௌபதி முர்மு ஜனவரி 16ஆம் தேதி மாலை அதிபர் மாளிகையில் வழங்கிய அரசுமுறை விருந்தில் திரு தர்மன் பேசினார்.
இருநாடுகளும் பல வழிகளில் வேறுபட்டு உள்ளதை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்த அவர், அந்த வேற்றுமையில் ஒற்றுமையைத் தான் காண்பதாக பெருமிதப்பட்டார்.
“வேற்றுமைகளைக் கொண்டு பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் வழிகளை நாம் கண்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார். அமைதியான, நீடித்த நிலைத்தன்மைமிக்க எதிர்கால உலகிற்கு இருதரப்பும் கடப்பாடு கொண்டுள்ளதையும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளைக் காணும் ஆற்றலைக் கொண்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
நிலையற்ற, பிளவுபட்ட உலகில் ஒவ்வொரு புதிய முயற்சியிலும், இரு தரப்பும் ஒருவருக்கொருவர் பலன் பெற்று நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது சாத்தியமே என்பதைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் உருமாற்றத்தைக் குறிப்பிட்டு அதிபர் மெச்சினார்.
சமுதாய, பொருளியல் மேம்பாடுகள், ஏழ்மையிலிருந்து பல நூறு மில்லியன் மக்களை மீட்டது, கிராமப்புறங்களில் மின்சார வசதி, குழாய் மூலம் சுத்தமான தண்ணீர், சமையல் எரிவாயு, கழிவறை, சுகாதாரப் பராமரிப்பு வசதி, கிராமங்களில் பாலர் பள்ளிகள் போன்ற அம்சங்களில் வரலாறு காணாத மேம்பாட்டை இந்தியா கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் 250 மில்லியன் பேரை ஏழ்மையிலிருந்து மீட்டதாகத் தெரிவித்த அதிபர், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வண்ணம் மின்னிலக்கப் புரட்சியை இந்தியா கண்டுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்த அதீத வளர்ச்சி 28 மாநிலங்களையும் சென்று அடைந்துள்ளது. பொது நலனுக்காக இந்தியா கொண்டுள்ள ஒருமித்த வேட்கையையும் ஆற்றலையும் அது காட்டுகிறது. 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலையை இந்தியா எட்டத் தேவையான அடித்தளத்தை அது ஏற்படுத்தியுள்ளது என்றார் திரு தர்மன்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் 60 ஆண்டுகால நட்புறவைக் கொண்டாடும் வண்ணம் அமைந்துள்ளது அதிபர் தர்மனின் பயணம். சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதை அங்கீகரித்த முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இருநாட்டுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்று வந்துள்ளதை கோடிட்டுக்காட்டிய அதிபர், இந்தியாவின் எதிர்காலப் பெருந்திட்டத்திலும் முதலீடு செய்ய சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது என்றார்.
அந்த விருந்தில் பேசிய இந்திய அதிபர் முர்மு, ஜனநாயகக் கொள்கைகளில் இருநாடுகளும் கொண்டுள்ள நம்பிக்கை ஒற்றுமைக்கான காரணங்களில் ஒன்று என்று தெரிவித்தார்.
இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கைக்கும் இந்தோ - பசிஃபிக் வட்டாரத்தின் கண்ணோட்டத்திற்கும் சிங்கப்பூர் முக்கியமாக ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார்.