தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இரு நாடுகளுக்கும் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மேல்நிலைக்குச் செல்லும் சிங்கப்பூர்-இந்திய உறவு

3 mins read
2025ல், இருதரப்பு அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகளும் உத்திபூர்வ உறவுகள் தொடங்கி 10 ஆண்டுகளும் நிறைவடையும்.
051e79cb-99b6-422b-b61f-3225d459bea6
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரின் முன்னிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துகொண்டனர்.  - படம்: எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரும் இந்தியாவும் முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவமாக இருநாட்டு உறவை வலுப்படுத்திக்கொண்டுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகையளித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பட்டுள்ளது.

உத்திபூர்வ பங்காளித்துவத்திலிருந்து முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவமாக இருநாட்டு உறவு மேம்பட்டுள்ளது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.

இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான திட்டங்களைத் தீட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரும் இந்தியாவும் ஆழமான, நீண்டகால நட்புறவைப் பேணும் நாடுகள். வலுவான பொருளியல், மக்கள்நிலைத் தொடர்புகளின் அடிப்படையில் உருவான உறவு அது என்று பிரதமர் வோங் கூறினார்.

நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கத் தொழில்நுட்பம், தொடர்பு உள்ளிட்ட துறைகளில் அணுக்கமாக ஒத்துழைப்பது இந்த மேம்பட்ட உறவில் அடங்கும்.

இருநாட்டு மக்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

மின்னிலக்கத் தொழில்நுட்பம், சுகாதாரமும் மருத்துவமும், கல்வி ஒத்துழைப்பும் திறன் மேம்பாடும், பகுதி மின்கடத்திக் கட்டமைப்பில் பங்காளித்துவம் தொடர்பான ஒப்பந்தங்கள் அவை.

சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரின் முன்னிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒப்பந்தப் பகிர்வு நிகழ்ச்சிக்குமுன் இரு பிரதமர்களும் சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினர்.
ஒப்பந்தப் பகிர்வு நிகழ்ச்சிக்குமுன் இரு பிரதமர்களும் சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினர். - படம்: எஸ்பிஎச் மீடியா

மின்னிலக்கத் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில், இந்தியாவின் தொழில்நுட்பம், இந்தியாவின் ரயில்வே, தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சிங்கப்பூரின் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்படும் மின்னிலக்கப் பரிவர்த்தனைகளும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகுதி மின்கடத்திக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அஸ்வினி வைஷ்ணவும் சிங்கப்பூர்த் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் இருவரும் கையெழுத்திட்டனர்.

கட்டமைப்பு மேம்பாட்டில் அரசாங்கம் வழி கொள்கைப் பரிமாற்றங்கள், விநியோகத் தொடர் (Supply chain) மீள்திறன், ஊழியர் அணி மேம்பாடு ஆகிய அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான வாய்ப்புகளைப் பயன்படுத்திகொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

“பகுதி மின்கடத்தித் துறையில் உலகெங்கும் உள்ள தொழில்துறைகளின் தேவையை எதிர்கொள்ள இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள கடப்பாட்டை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் காட்டுகிறது,” என்றார் திரு கான்.

திரு மோடியின் சிங்கப்பூர்ப் பயணத்தின் ஓர் அங்கமாக வியாழக்கிழமை, இரு பிரதமர்களும் பகுதி மின்கடத்தித் துறை நிறுவனமான ‘ஏஇஎம் சிங்கப்பூர்’ வளாகத்தைப் பார்வையிட்டனர்.

‘ஏஇஎம் சிங்கப்பூர்’ வளாகத்தில் மின்கடத்தித் தொழில்நுட்பக் கருவிகளை பார்வையிட்ட இரு பிரதமர்களும்.
‘ஏஇஎம் சிங்கப்பூர்’ வளாகத்தில் மின்கடத்தித் தொழில்நுட்பக் கருவிகளை பார்வையிட்ட இரு பிரதமர்களும். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

அங்கு ஒடிசாவின் உலகத் திறன் நிலையத்தைச் சேர்ந்த உள்ளகப் பயிற்சி மாணவர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர். ‘இந்தியா ரெடி’ திறனாளர் திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ளகப் பயிற்சி பெற்ற சிங்கப்பூர் மாணவர்களுடனும் இரு தலைவர்களும் பேசினர்.

சுகாதாரமும் மருத்துவமும் குறித்த ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங், இந்தியாவின் சுகாதாரம், ரசாயனம், உரம் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் ஜெகன் பிரகாஷ் நட்டா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கல்வி ஒத்துழைப்பும் திறன் மேம்பாடும் குறித்த ஒப்பந்தத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங், இந்தியாவின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திரு மோடியுடன் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (வலம்).
திரு மோடியுடன் நடந்த விருந்து நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (வலம்). - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

இதையடுத்து வியாழக்கிழமை பிற்பகல், அதிபர் தர்மன் சண்முகரத்னம், மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

மாலை நேரம் ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற தனியார் நிறுவனத் தலைவர்களுடனான வட்டமேசைக் கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தனம் அடுத்த ஆண்டு இந்தியவிற்கு வருகை புரிவதை எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் மோடி கூறினார்.
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தனம் அடுத்த ஆண்டு இந்தியவிற்கு வருகை புரிவதை எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் மோடி கூறினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மோடி, செப்டம்பர் 4, 5ஆம் தேதிகளில் சிங்கப்பூருக்கு இருநாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்