சிங்கப்பூர்-இந்தியா 60 ஆண்டு அரசதந்திர உறவுகளைக் குறிக்கும் சிறப்பு சின்னம் அறிமுகம்

1 mins read
044ca38a-85f3-4ce3-bee7-a36a64a8723c
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக ஆண்டு முழுவதும் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளுக்கு இந்தச் சிறப்பு சின்னம் பயன்படுத்தப்படும். - படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் கொண்டாடும் வண்ணம் இருநாட்டுத் தேசியக் கொடிகளின் வண்ணங்களைக் கொண்டு சிறப்பு சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக ஆண்டு முழுவதும் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளுக்கு இந்தச் சிறப்பு சின்னம் பயன்படுத்தப்படும்.

சிங்கப்பூரின் தேசிய மலரான ஆர்க்கிட் மலரின் வாண்டா மிஸ் ஜோகிம் வகை மலரும் இந்தியாவைக் குறிக்கும் தாமரையும் அந்தச் சின்னத்தில் அங்கம் வகிக்கின்றன. வளர்ச்சியையும் செழிப்பையும் குறிப்பதோடு உறவுகளின் முன்னோக்கிய கண்ணோட்டத்தையும் அது கோடிட்டுக் காட்டுவதாகக் கூறப்பட்டது.

புதிய சின்னத்தை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் இந்திய அதிபர் திரௌபதி முர்முவும் இணைந்து வெளியிட்டனர். அதிபர் தர்மன் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள ஐந்து நாள் அரசுமுறைப் பயணத்தின்போது புதுடெல்லியில் இந்தச் சின்னம் வெளியீடு கண்டது.

இரு நாடுகளும் கூட்டாகத் தயாரித்துள்ள இந்தச் சின்னத்தில் உள்ள அம்சங்கள் நீடித்த நட்புறவையும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள நம்பிக்கையையும் ஒருமித்த விழுமியங்களையும் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளின் ஒருமித்த வரலாற்றையும் கலாசார உறவுகளையும் பிரதிபலிப்பதோடு 60 ஆண்டு அரசதந்திர உறவுகளையும் கொண்டாடும் வண்ணம் சின்னம் அமைந்துள்ளதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்