அனைத்துலக அளவில் ஆகாய விமானத் தொழில்துறை நெருக்கடியைச் சந்தித்தாலும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வட்டார விமானச் சேவைகளுக்கான தேவை வலுவடைந்ததுடன் பயணிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் அதிகரித்தது.
ஹாங்காங்கில் நிலவும் அரசியல் பிரச்சினைகள், இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் சேவைகளை நிறுத்தியது ஆகியவற்றுக்கிடையே இந்த வளர்ச்சியை சிங்கப்பூர் எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சாங்கி விமான நிலையம் 61.9 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. அவர்களில் பத்தில் நால்வர் என்ற விகிதத்திற்கும் அதிகமானோர் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு 26% பயணிகள் வடகிழக்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று 130ஆக இருந்த வாராந்திர ஹாங்காங் விமானச் சேவைகளின் எண்ணிக்கை தற்போது 115ஆகக் குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சிங்கப்பூரிடையே தினமும் 9 விமானச் சேவைகளை வழங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டதும் கவனிக்கத்தக்கது. சில சேவைகளை மற்ற இந்திய விமான நிறுவனங்களின் விமானச் சேவைகள் ஈடுகட்டின.
கடந்த ஆண்டு சாங்கி விமான நிலையம் கையாண்ட மொத்த பயணிகளின் எண்ணிக்கை விவரம் இன்னும் வெளியாகாவிட்டாலும் அதற்கு முந்தைய ஆண்டு சாங்கி விமான நிலையம் கையாண்ட 65.6 மில்லியன் பணிகளைவிட கடந்த ஆண்டு அதிகமான பயணிகளை சாங்கி விமான நிலையம் கையாண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் அதிக பரபரப்பான விமான நிலையங்களில் ஏழாவது இடத்தில் சாங்கி விமான நிலையம் உள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity