செங்காங்கில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் (கொண்டோமினியம்) உள்ள வீடு ஒன்றில் 43 வயதான தம் மனைவியைக் கொலை செய்ததாக 48 வயது ஆடவர் மீது இன்று (ஜனவரி 4) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பால் லெஸ்லி குவர்க் எனும் அந்த ஆடவர், எண் 125 காம்பஸ்வேல் போவில் இருக்கும் எஸ்பரினா ரெசிடன்சஸ் எனும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று கைது செய்யப்பட்டார். அந்த வீட்டில் திருவாட்டி கிறிஸ்டினா கூ கெக் ஹுவா எனும் பெண் அசைவின்றி கிடப்பதாக நேற்று பிற்பகல் 12.07 மணிக்கு போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்தப் பெண் உயிரிழந்ததை துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிப்படுத்தினர்.
வெள்ளை நிற நாய் ஒன்று அந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது.
மனநல கண்காணிப்புக்காக குவர்க் சாங்கி சிறையின் மருத்துவ நிலையத்தில் மூன்று வாரங்களுக்கு வைக்கப்பட்டு, எதிர்வரும் 24ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்படுவார்.
நேற்று காலை 11 மணியளவில் சுமார் 15 நிமிடங்களுக்கு, மூன்றாவது மாடியிலிருந்த அந்தத் தம்பதியின் வீட்டிலிருந்து பலத்த சத்தமான பேச்சுக்குரல்கள் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் அடிக்கடி கைகோத்தபடி நடந்து செல்வதைப் பார்த்திருப்பதாகவும் அவர்களில் சிலர் குறிப்பிட்டனர்.
அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் தங்கியிருப்பதாகவும் அவர்களது ஃபேஸ்புக் பக்கங்களில் மகன் என்று குறிப்பிடப்பட்ட ஒரு குழந்தை அவ்வப்போது அவர்களுடன் தங்கும் என்றும் கூறப்பட்டது.
குவர்க்கின் ‘லின்க்டு-இன்’ தகவலின்படி அவர் ஒரு பாதம் தொடர்பான மருத்துவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவரான குவர்க், இங்கு ‘லாங்-டெர்ம் பாஸ்’ அனுமதியில் இங்கு இருப்பதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
மசாச்சூசெட்சில் இருக்கும் பர்லிங்டனில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் சார்பில் இங்கு இயக்குநராக பணிபுரிந்ததாக திருமதி கூவின் ‘லின்க்டு-இன்’ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை செய்தது நிரூபணமானால் குவர்க்குக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity