சுடச் சுடச் செய்திகள்

பிடோக் வீவக புளோக்கின் குப்பைத் தொட்டியில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட ஆண் சிசு 

பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் புளோக் 534ன் கீழ்த் தளத்தில் உள்ள குப்பை சேகரிக்கும் தொட்டிக்குள் பச்சிளம் ஆண் சிசு ஒன்று உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பைக்குள் சுற்றி வைக்கப்பட்டிருந்த அந்தச் சிசு மற்ற குப்பைகளுடனும் உணவுப் பொட்டலங்களுடனும் கிடந்ததை இன்று (ஜனவரி 7) காலை துப்புரவாளர்கள் கண்டுபிடித்தனர்.

அப்போதுதான் பிறந்த சிசுவைப்போல அது இருந்தது. அந்த பிளாஸ்டிக் பையில் ரத்தக் கறை இருந்ததை அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டின.

அருகிலிருந்த காப்பிக் கடைக்கு காலை உணவு அருந்தச் சென்ற 72 வயதான திரு லிம் யோக் லியாங், “அந்த புளோக்குக்கு கீழே திறந்த வெளி கார் நிறுத்துமிடத்தில் அவசர சிகிச்சை வாகனம் ஒன்றைப் பார்த்தேன். ஒரு போலிஸ் அதிகாரி, துணியில் சுற்றிய ஒரு சிசுவைக் கையில் வைத்திருந்தார்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

“அந்தச் சிசு அழவில்லை. ஆனால் அது சுவாசித்துக்கொண்டிருந்ததைப்போல இருந்தது,” என்றார் அவர்.

அவசர சிகிச்சை வாகனத்தில் அந்த சிசு கொண்டு செல்லப்பட்டது.

அந்த புளோக்கின் ஒவ்வொரு தளத்திலும் போலிசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

12வது மாடியில் இருந்த ஒரு வீட்டில் ஒரு போலிஸ் அதிகாரி இருந்ததைக் காண முடிந்தது. அந்த வீட்டின் சமையலறையில் வயதான ஒரு பெண்மணி இருந்தார்.

அந்த புளோக்கில் உதவி வேண்டி காலை 9.11 மணிக்கு அழைப்பு வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
 
அங்கு விரைந்த துணை மருத்துவ அதிகாரிகள் குழந்தைக்கு வேண்டிய சிகிச்சை அளித்தனர். சிசுவின் உடலில் காயங்கள் எதுவும் தென்படவில்லை. குழந்தையின் நிலை சீராக இருந்தது.

கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு அந்த சிசு பின்னர் கொண்டுசெல்லப்பட்டது.

அந்தக் குழந்தையின் பெற்றோர் யார் என்பதைக் கண்டறியும் பணியில் போலிஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் போலிசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

அத்துடன், அந்தக் குடியிருப்பின் அருகிலுள்ள கார் நிறுத்தப் பூங்காவினுள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்களை அவர்கள் தொடர்புகொண்டு, அவற்றில் பதிவான காணொளிகளைத் தருமாறு கோரினர்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2009 முதல் 2018க்கு இடைப்பட்ட காலத்தில், சிங்கப்பூரில் மொத்தம் 16 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

உதவி தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கான தொலைபேசி எண்: 1800-686-8623

கர்ப்பகால நெருக்கடிச் சேவைகளுக்கான தொலைபேசி எண்: 63399770

கர்ப்பகால நெருக்கடிகளை எதிர்நோக்கும் பதின்ம வயதினர், உதவி தேவைப்பட்டால்  BABES எனப்படும் 24 மணி நேர குறுஞ்செய்தி உதவி அமைப்பை 81113535 என்ற எண்ணில் நாடலாம்.

‘சேஃப் பிளேஸ்’ அமைப்புடன் தொடர்புகொள்ள 68174202 என்ற தொலைபேசி எண்ணை நாடலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon