12 வயது மாணவன் உட்பட மூன்று புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

சிங்கப்பூரில் மேலும் மூன்று புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதை சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் ராஃபிள்ஸ் கல்வி நிலைய (ஆர்ஐ ) மாணவரும் ஒருவர். அந்த 12 வயது மாணவருடன் 64 வயது பெண், 44 வயது ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதற்கிடையே  நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இப்போது கிருமித்தொற்றுச் சம்பவங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது. இதில் 66 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள 30 நோயாளிகளில் எட்டுப் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

ஆர்ஐ மாணவர் சிங்கப்பூரில் கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட 96வது நபர். அவர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 94 வது நபரான 64 வயது பெண்ணின் உறவினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஜாலான் ஜூரோங் கெச்சில் பகுதியில் வசிக்கும் அம்மாது, கடந்த 10ஆம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதற்காக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற்றார். 17, 20 தேதிகளிலும் அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். கடந்த 24 ஆம் தேதி மீண்டும் மருத்துவரைப் பார்த்தபோது அவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டார். கடந்த புதன்கிழமை அவருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பிப்ரவரி 27ஆம் தேதியன்று  ஆர்ஐ மாணவருக்கு  கொரோனா கிருமி தொற்றியுள்ளதாகக்  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் கே கே மகளிர் சிறார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 20ஆம் தேதியன்று அவர் பீஷானிலுள்ள கல்வியமைச்சின் மொழி நிலையத்தில் வகுப்பு ஒன்றுக்குச் சென்றதால் நாளை ( பிப்ரவரி 28 ) அங்கு அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்படும்.  அத்துடன் மொழி நிலைய வளாகம் சுத்தம் செய்யப்படும். பாதிக்கப்பட்ட மாணவருடன் அணுக்கமான தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், நிலைய பணியாளர்கள் ஆகியோருக்கு 14 நாள் கட்டாய விடுப்பு கொடுக்கப்படும்

கிருமித்தொற்று ஏற்பட்ட 95வது நபர் 44 வயது  ஆடவர். அவர் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 38 வயதான 93வது ஆடவருடன் தொடர்புடையவர்.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர்