'சிங்கப்பூர் ஆயத்தமாக வேண்டியது அவசியம்; நீண்ட காலத்திற்குக் கிருமித் தொல்லை நீடிக்கலாம்'

'சிங்கப்பூர் ஆயத்தமாக வேண்டியது அவசியம்; நீண்ட காலத்திற்குக் கிருமித் தொல்லை நீடிக்கலாம்'

2 mins read
232dbe60-02e6-4f2f-9597-c2f4a3e2caaa
கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா கிருமி அதிக காலத்திற்கு நீண்ட தொல்லையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதைச் சமாளிக்க சிங்கப்பூர் ஆயத்தமாக வேண்டி இருக்கிறது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா கிருமி அதிக காலத்திற்கு நீண்ட தொல்லையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதைச் சமாளிக்க சிங்கப்பூர் ஆயத்தமாக வேண்டி இருக்கிறது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு வெளியே அந்தக் கிருமி பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

உலக நிலவரம் இப்படி இருப்பதால் சிங்கப்பூருக்குள் கொரோனா நுழையும் ஆபத்து அதிகமாகிவிடுகிறது என்றும் இது கவலை அளிப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், பக்கத்து நாடுகளிலும் கொரோனா அதிகம் தலைகாட்டுவதால் இந்தத் தொற்றுநோய் அதிக காலத்திற்கு நமக்குத் தொல்லை கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

சூழ்நிலையைச் சமாளிக்கச் செயல்படும் பாணியையும் முறையையும் சிங்கப்பூர் தொடர்ந்து நிலவரங்களுக்கு ஏற்பட சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர், அப்படிச் செய்து வருவதன் மூலம் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வாழ்க்கையைத் தொடர முடியும் என்றும் நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 5) தெரிவித்தார்.

கொரோனா கிருமி அதிக நாடுகளைப் பாதித்து வருவதால் எல்லைகளில் அந்தக் கிருமியைத் தடுத்து நிறுத்துவது மேலும் சிரமமாகி வருகிறது என்று திரு கான் குறிப்பிட்டார்.

சுற்றுப்பயணிகள் எல்லாருக்கும் நாம் கதவைச் சாத்திவிட முடியாது என்றும் அவர் விளக்கினார்.

பாட்டாளிக் கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், ஒவ்வொரு முறை தொற்றுநோய் பாதிக்கும்போதும் அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாக வைத்து அடுத்த மிரட்டலைச் சமாளிக்க நாம் ஆயத்தமாகி வந்தாலும்கூட எதிர்பாராத வகையில் பலவும் நடக்கக்கூடும் என்பதை நாம் எதிர்பார்த்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.

கொரோனா கிருமியை ஒழிப்பதற்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கும் அதற்கான சிகிச்சைக்கும் காலம் பிடிக்கும்போல் தெரிகிறது. இதை வைத்து பார்க்கையில், அநேகமாக இந்தக் கிருமி நீண்ட காலத்திற்குத் தொல்லை கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு ஏற்ப நாம் நம்மைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் திரு கான் வலியுறுத்தினார்.

செம்மையான முயற்சிகளை, உடனே எடுப்பதற்கான திறமைதான் இதில் முக்கியம் என்று குறிப்பிட்ட அமைச்சர், அரசாங்கத்தின் முழுமையான அணுகுமுறையும் ஏற்புடைய அனைத்து அமைப்புகளின் வளங்களையும் ஆற்றலையும் திரட்டக்கூடிய திறமையும் இதற்குத் தேவை என்றார்.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் அமைச்சர் கான் கிம் யோங்கின் முழு உரையையும் வாசிக்க நாளைய (மார்ச் 6) தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#கொவிட்-19, #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்