சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டு ஊழியர் உட்பட மேலும் 5 பேருக்கு கிருமித்தொற்று

2 mins read
83093397-747e-4eec-95d6-98dfa21b99ed
ஜூரோங் சாஃப்ராவில் உள்ள ஜாய் கார்டன் உணவகத்தின் தொடர்பில் நான்கு புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இன்று உறுதி செய்யப்பட்டன. படம்: SCREENGRAB FROM GOOGLE MAPS -

சிங்கப்பூரில் புதிதாக ஐவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 5) உறுதி செய்யப்பட்டது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆகியுள்ளது.

இதில், கிருமி பரவும் புதிய இடமாக சாஃப்ரா ஜூரோங் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி அங்கு நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்துகொண்டவர்கள் அவர்கள்.

சாஃப்ரா ஜூரோங்கில் உள்ள ஜாய் கார்டன் உணவகத்தில் எட்டு கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு இன்று உறுதிப்படுத்தப்பட்டவை.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நால்வர்: 62 வயது ஆடவர், 62, 50, 52 வயதுகளில் இருக்கும் மூன்று பெண்கள். இவர்கள் அனைவரும் சிங்கப்பூர் குடிமக்கள். அவர்கள் அனைவரும் அண்மையில் சீனாவுக்கோ, தென்கொரியாவின் டேகு அல்லது சியோங்டோ பகுதிக்கோ பயணம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட ராஃபிள்ஸ் கல்விக்கழக மாணவர், கிரியேட்டிவ் ஓ பிரிஸ்கூலர்ஸ் பே ஊழியர் ஆகிய இருவரும் இந்தப் புதிய வட்டாரத்துடன் தொடர்புடையவர்கள்.

பிப்ரவரி 16 முதல் 19 வரை அந்த உணவகம் துப்புரவுப் பணிகளுக்காக மூடப்பட்டதாக சாஃப்ரா தெரிவித்தது.

அந்த உணவகம், அவர்கள் சென்றிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் பகுதிகள் போன்றவை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக சாஃப்ரா தெரிவித்தது.

விருந்துக்காக அந்த உணவகத்துக்குச் சென்றவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அப்போது யாருக்கும் காய்ச்சல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று கிருமித்தொற்று கண்ட ஐந்தாவது நபர், துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் வந்த 42 வயது பிரெஞ்சு நாட்டவர். வேலை அனுமதிச் சீட்டுடன் அவர் இங்கு பணிபுரிகிறார்.

அவர் அண்மையில் சீனாவுக்கோ, தென்கொரியாவின் டேகு அல்லது சியோங்டோ பகுதிக்கோ பயணம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பிரான்ஸ், போர்ச்சுகல், ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு பிப்ரவரி 8 முதல் மார்ச் 3 வரை சென்று வந்தவர். அவர் தற்போது தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்தான்புல்லில் இருந்து சிங்கப்பூருக்கு துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தபோது அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டதாகச் சொல்லப்பட்டது.

நேற்று தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்திற்குச் சென்ற அவர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்பாக அவர் கிளெனிகள்ஸ் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். மவுன்ட் சோஃபியா பகுதியில் வசிப்பவர் அவர்.

கிருமித்தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் முயற்சி தொடர்கிறது.

அதே சமயம், கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து இருவர் வீடு திரும்பியதாகவும் அமைச்சு கூறியது. இவர்களையும் சேர்த்து, இதுவரை 81 பேர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் எஞ்சியுள்ள 36 பேரில், பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகியோ, மேம்பட்டோ வருகிறது. எழுவர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்