சுகாதார அமைச்சர்: சிங்கப்பூரில் கிருமித்தொற்று மரணம் தவிர்க்க இயலாதது

சுகாதார அமைச்சர்: சிங்கப்பூரில் கிருமித்தொற்று மரணம் தவிர்க்க இயலாதது

2 mins read
3b79e7d2-cccb-41e6-abee-bbc98a3bcea7
கொரோனா கிருமி பரவலை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள பல  அமைச்சுகளின் பணிக்குழுவுக்கு இணைத் தலைவராகவும் விளங்கும் திரு கான், இன்றைய (மார்ச் 5) நிலவரப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஏழு நோயாளிகளின் நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் மரணம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

கொரோனா கிருமி பரவலை தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள பல அமைச்சுகளின் பணிக்குழுவுக்கு இணைத் தலைவராகவும் விளங்கும் திரு கான், இன்றைய (மார்ச் 5) நிலவரப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஏழு நோயாளிகளின் நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர்கள் அனைவரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், "இதுவரை நமது சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் கடுமையாகப் பணி செய்து அவர்களுக்கு உதவி வருவதால், அவர்கள் குணமடைவர் என்று நம்புவோமாக.

"ஆனால், ஒரு கட்டத்தில் கொவிட் 19 கிருமித்தொற்று காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் நடப்பதுபோல், மரணங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாது," என்று அவர் விளக்கினார்.

இதேபோல், இதற்கு முன்னரும் திரு கான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.

பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அவர் அளித்த பேட்டியில், "இந்த நோய்க்கு ஆளான பலரும் இதிலிருந்து குணமடைவர் என்றாலும், இதில் சிலர் கடுமையான பாதிப்புக்கு ஆளாவதுடன் இறுதியில் ஒரு சிலர் இந்தக் கிருமித்தொற்றுக்கு பலியாகலாம். எந்த மோசமான நிலைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்தக் கிருமித்தொற்று குறித்து இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவ சேவைகள் இயக்குநரான கென்னத் மாக், "சிங்கப்பூரில் இந்தக் கிருமித்தொற்றுக்கு ஆளானோருக்கு மிதமான நோய் அறிகுறிகளே கண்டுள்ளது நமது அதிர்ஷ்டம். இதில் நோயாளிகளை நீண்டகாலமாக மருத்துவமனைகளில் வைத்திருப்பதற்கு காரணம் அவர்களை வீட்டுக்கு அனுப்பு முன் அவர்கள் பூரணமாக குணமடைய வேண்டும் என்பதுதான்," என்று விளக்கினார்.

தொடர்ந்து பேசிய திரு மாக், "தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு சுவாசிக்க உதவும் வகையில் அவர்களுக்கு பிராணவாயு வழங்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பலருக்கு கிருமி எதிர்ப்பு மருந்துகள் உட்பட, பல்வேறு மாற்று சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றனன," என்று தெரிவித்தார்.

நோய் தொடர்பாக தனிப்பட்டவர்களின் விவரங்களை சுகாதார அமைச்சு வெளியிடுவது வழக்கமில்லை என்றபோதும், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன் இந்தக் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட 39 வயது பங்ளாதேஷியர் இன்னமும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#கொவிட்-19, #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்