சிங்கப்பூரையும் பிரதமர் லீயையும் பாராட்டிய உலக சுகாதார நிறுவனம்

சிங்கப்பூரையும் பிரதமர் லீயையும் பாராட்டிய உலக சுகாதார நிறுவனம்

2 mins read
f56c02bf-74a1-45db-8321-0ef226e3c7bb
கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு சிங்கப்பூரையும் பிரதமர் லீயையும் (இடது) உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் பாராட்டியுள்ளார். படங்கள்: புளூம்பெர்க், ஏஎஃப்பி -

கொவிட்-19 என்னும் கொரோனா கிருமி பரவல் அபாயத்தைத் தணிக்க ஒட்டுமொத்த அரசாங்கமும் இறங்கி வேலை செய்வதாக சிங்கப்பூரை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி கௌரவித்து உள்ளது.

சிங்கப்பூரின் இந்த அணுகுமுறை உலகிற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று கூறியுள்ள நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ், "கிருமி பரவல் அபாயம் பற்றி விளக்கிடவும் அபாயத் தடுப்பு தொடர்பில் மக்களுக்கு மறுஉறுதி அளிக்கவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தொடர்ந்து அனுப்பி வரும் காணொளிகள் பெரிதும் உதவி வருகின்றன," என்று கூறியுள்ளார்.

சிங்கப்பூரைப்போலவே ஒட்டுமொத்த அரசாங்கமும் இறங்கி கிருமி பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பிற நாடுகளையும் அவர் பட்டியலிட்டார்.

சீனா, இத்தாலி, ஜப்பான், தென்கொரிய குடியரசு, அமெரிக்கா போன்ற நாடுகள் அவசரநிலை நடவடிக்கைகளை அறிவித்து செயல்படுவதாக டாக்டர் டெட்ரோஸ் குறிப்பிட்டார்.

ஜெனிவா நகரில் உள்ள உலக சுகாதார நிறுவனத் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதற்கு முன்னரும் சிங்கப்பூரின் நடவடிக்கைகளைப் பாராட்டி உள்ளார்.

கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளான ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அவரிடமிருந்து கிருமி பரவாதிருக்க பாதிக்கப்பட்டவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை மிக விரைவாகக் கண்டறிவதில் முனைப்பு காட்டி வரும் சிங்கப்பூரின் நடவடிக்கைகள் தம்மைப் பெரிதும் கவர்ந்துள்ளதாக பிப்ரவரி நடுப்பகுதியில் உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது.

இதற்கிடையே, சீனாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினர் தேறிவிட்டதாக டாக்டர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

கிருமி பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நான்கு நாடுகள் மட்டும் கொவிட்-19 கிருமித்தொற்றின் உலகளவிலான எண்ணிக்கையில் 93 விழுக்காட்டை வகிப்பதாகச் சொன்ன அவர், அந்த நான்கில் சீனாவிலும் தென்கொரியாவிலும் அபாயநிலை படிப்படியாகத் தணிந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இதர இரு நாடுகளான இத்தாலியிலும் ஈரானிலும் விரைவில் அதுபோன்ற முன்னேற்றம் ஏற்படலாம் என்றார் அவர்.

#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்