கொவிட்-19: அமைச்சர்நிலை பணிக்குழு அறிவித்த கூடுதல் நடவடிக்கைகளின் 7 முக்கிய அம்சங்கள்

3 mins read
3103cd66-d769-40f0-9945-b13c54dd75aa
சமூகத்தினருக்கு இடையிலான தூர இடைவெளியை அதிகரித்தலுக்கு முன்னுதாரணமாக, கொவிட்-19ஐ கையாளும் அமைச்சர்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்கள் வழக்கத்தைவிட அதிக தூர இடைவெளியில் அமரவைக்கப்பட்டனர். அதேபோல அமைச்சர்களும் ஒருவருக்கொருவர் தூரமாக (கிட்டத்தட்ட 1 மீட்டர்) அமர்ந்திருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19ஐ உலகளாவிய தொற்று நோயாக அறிவித்ததையடுத்து, உலக நாடுகள் கொரோனா கிருமித்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சிங்கப்பூரில் கிருமித்தொற்று பரவலைக் கையாளும் அமைச்சர்நிலை குழு சில கூடுதல் நடவடிக்கைகளை இன்று (மார்ச் 13) அறிவித்தது.

பயணங்கள்: மார்ச் பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதையொட்டி, இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 1. கொவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு முக்கியமற்ற பயணங்களைத் தவிர்க்க ஆலோசனை: இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட எட்டு நாடுகள் கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்று இந்த வகையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சீனா, ஈரான், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு முக்கியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஏற்கெனவே சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

2. கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளுக்குச் செல்வோர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருத்தல்: வெளிநாட்டிலிருந்து வந்த சிலருக்கு சிங்கப்பூரில் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவற்றுடன் மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற அத்தகைய நாடுகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

எகிப்து, ஹாங்காங், இந்தியா, இஸ்ரேல், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்வோரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சமூகத்தினருக்கு இடையிலான தூர இடைவெளியை அதிகரித்தல்: உள்ளூரில் கொவிட்-19 சமூகப் பரவல் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பெரிய நிகழ்வுகளில் பங்கேற்போர் தங்களது உடல் நலனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பணிக்குழு, உடல்நலக் குறைவுடன் இருந்தால் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அறிவுறுத்தியுள்ளது.

3. 250 அல்லது அதற்கும் அதிகமானோர் பங்கேற்கக்கூடிய, நுழைவுச்சீட்டு நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தல் அல்லது ரத்து செய்தல்: நுழைவுச்சீட்டு விற்பனை தொடங்காத நிலையில் கலாசார, விளையாட்டு, பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்றவை இதில் அடங்கும்.

ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளைத் தொடர, ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதிசெய்யவேண்டும்.

4. தனியார் நிகழ்ச்சிகள், சமயம் தொடர்பான சேவைகள் போன்றவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 250 பேருக்கும் குறைவானவர்கள் பங்கேற்கும் விதத்தில் நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தைக் குறைக்கலாம். நிகழ்ச்சிக்கு வந்திருப்போருக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி இருக்குமாறு அமரவைக்கப்படலாம். நிகழ்ச்சி நடைபெறும் இடம் நல்ல காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பங்கேற்பாளர்களின் உடல் வெப்பநிலையைப் பதிவு செய்வதுடன் உடல் நலக் குறைவுடன் இருப்பவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கலாம்.

பங்கேற்பாளர்களின் தொடர்பு எண்களைப் பதிவு செய்ய வேண்டும்.

எல்லைக் கட்டுப்பாடுகள்: சிங்கப்பூர் துறைமுகத்தில் கப்பல்கள் அனுமதிக்கப்படமாட்டா.

5. வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வரும்போது காய்ச்சல், சுவாசப் பிரச்சினை போன்றவை இருந்தால் அவர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அவர்களது நாசி திரவத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இல்லை என்று காட்டினாலும் அவர்கள் 2 வாரங்களுக்கு எல்லா நேரத்திலும் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

6. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு கடந்த 2 வாரங்களில் சென்றவர்கள் சிங்கப்பூருக்குள் நுழையவோ, அல்லது சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லவோ அனுமதி இல்லை. வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) இரவு 11.59 மணியிலிருந்து இது நடப்புக்கு வரும். அங்கு சென்ற சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகாலத்துக்குத் தங்க அனுமதிச் சீட்டு வைத்திருப்போர் போன்றோர் 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வேலை இடங்களுக்கும் பொது இடங்களுக்குமான ஆலோசனைகள்:

7. முதலாளிகள், உரிமையாளார்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகள்: முதலாளிகள் தங்கள் வேலை இடங்களில் ஊழியர்களின் தூர இடைவெளியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உணவு விடுதிகள், கேளிக்கை இடங்கள், சுற்றுலா தலங்கள், உள்ளரங்கு விளையாட்டு மையங்கள் ஆகிய இடங்களில் வருகையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது; அவர்களின் தூர இடைவெளியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

வேலை நேரத்தை மாற்றுவதன் மூலம் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத நேரங்களில் ஊழியர்கள் பயணம் செய்ய வழிவகை செய்வது, இயன்றவரை காணொளி மூலம் கூட்டங்களை நடத்துவது போன்றவற்றை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தலாம்.

#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்