இந்திய ஊழியர் உட்பட மேலும் 13 பேருக்கு சிங்கப்பூரில் கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 200

இந்திய ஊழியர் உட்பட மேலும் 13 பேருக்கு சிங்கப்பூரில் கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 200

2 mins read
e1aba31a-b53a-495d-817c-322f14f05a05
அந்த இந்திய ஆடவர், கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் மார்ச் மாதம் முதல் தேதி வரை இந்தியாவில் இருந்தவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இன்று (மார்ச் 13) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதில் ஒருவர் இந்திய ஊழியர். கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 189வது நபரான அவர் சிங்கப்பூரில் வேலை அனுமதிச்சீட்டுடன் பனிபுரிந்து வருகிறார்.

அந்த இந்திய ஆடவர், கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் மார்ச் மாதம் முதல் தேதி வரை இந்தியாவில் இருந்தவர்.

தற்போது தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இம்மாதம் 11ஆம் தேதி அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. தனியார் மருந்தகத்தில் 12ஆம் தேதி சிகிச்சை பெற்ற அவர், தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கிருமித்தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் 3 தெமாசெக் அவென்யூவில் இருக்கும் முனிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்பரேஷனில் வேலைக்குச் சென்றார். அவர் செயின்ட் ஜார்ஜ'ஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வசிக்கிறார்.

கோலாலம்பூருக்கு அருகில் நடைபெற்ற சமயக் கூட்டத்தில் பங்கேற்ற மேலும் இருவருக்கு இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்று, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆகியுள்ளது.

மொத்தம் 44 பேருடன், ஜூரோங் சாஃப்ரா கிருமித்தொற்று வட்டாரம், ஆக அதிக கிருமித்தொற்று சம்பவங்களை உள்ளடக்கிய வட்டாரமாகத் திகழ்கிறது.

இதனையடுத்து சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஆகியுள்ளது.

அவர்களில் 97 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

எஞ்சிய 103 பேரில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. மற்றவர்களின் உடல்நலம் தேறியோ, மேம்பட்டோ வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்