சிங்கப்பூரில் 86 வயது முதியவர் உட்பட புதிதாக 17 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
2509a458-1116-4cb5-ac9e-530527e1dd38
சாங்கி விமான நிலையத்தில் இன்று வந்து இறங்கிய பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 16) உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிருமித்தொற்று கண்டவர்களில் 11 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஒரே நாளில் இத்தனை சம்பவங்கள் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை.

கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 86 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவரும் அடங்குவார். சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்று கண்டவர்களில் இவரே ஆக அதிக வயதுடையவர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 17 பேரில் நால்வர் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். இருவருக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பு இல்லை.

புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 243ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள மேலும் நால்வர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 109 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 134 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளது, அல்லது மேம்பட்டு வருகிறது. எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 13 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் கிருமித்தொற்று சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிங்கப்பூர் நேற்று அறிவித்தது. வெளிநாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களை அது கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்