சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 17) உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிருமித்தொற்று கண்டவர்களில் 17 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதுவரை பதிவான தினசரி கிருமித்தொற்று எண்ணிக்கையில் இன்றுதான் ஆக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 47 வயது இந்திய ஆடவர் ஒருவரும் ஒருவர். இவர், கிருமித்தொற்று கண்ட 258வது நபர்.
இவர் கடந்த பிப்ரவரி 9 முதல், மார்ச் 15 வரை ஐரோப்பாவில் இருந்தவர். அவருக்கு கிருமித்தொற்று இருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டது. அவர் தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 23 பேரில் இருவர் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். நால்வருக்கு முந்தைய சம்பவங்களுடன் தொடர்பு இல்லை.
புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 266ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள மேலும் ஐவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 114 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 152 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளது, அல்லது மேம்பட்டு வருகிறது. எனினும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 14 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் கிருமித்தொற்று சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிங்கப்பூர் நேற்று முன்தினம் அறிவித்தது. வெளிநாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களை அது கேட்டுக்கொண்டது.
#கொரோனா #சிங்கப்பூர்

