சிங்கப்பூரில் மேலும் 47 பேருக்கு கிருமித்தொற்று; சிங்கப்பூருக்குள் வரும் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலிருக்க ஆணை

சிங்கப்பூரில் மேலும் 47 பேருக்கு கிருமித்தொற்று; சிங்கப்பூருக்குள் வரும் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலிருக்க ஆணை

2 mins read
38acc08c-dcda-4aeb-8c10-c8567898348a
சிங்கப்பூருக்குள் வரும் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டில் இருக்கவேண்டும் என்ற நடைமுறை வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) இரவு 11.59 முதல் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டில் இருக்க வேண்டும் எனவும் சிங்கப்பூரில் இருப்போர் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் இன்று (மார்ச் 18) அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்திருப்பதையடுத்து, இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இன்றுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 313 ஆகியுள்ளது.

இன்று உறுதிப்படுத்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 33 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என்றும் அவர்களில் 30 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய சிங்கப்பூர்வாசிகள் என்றும் கூறப்பட்டது.

பணிபுரிவோர், கல்வி பயில்வோர் என சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பக் காத்திருப்பதால், வரும் நாட்களில் சிங்கப்பூரில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லார்ன்ஸ் வோங் தெரிவித்தார். கொவிட்-19ஐ கையாளும் அமைச்சர்நிலை பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவர் அவர்.

சிங்கப்பூருக்குள் வரும் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டில் இருக்கவேண்டும் என்ற நடைமுறை வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) இரவு 11.59 முதல் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

கிருமித்தொற்று எண்ணிக்கை அண்மையில் உயர்ந்திருப்பது அனைவரின் அக்கறைக்குரியது என்றும் இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

மூத்தோர், அதிகம் பாதிப்புக்குளாகக்கூடிய உள்ளூர் சமூகம் போன்றவர்களுக்கு கிருமித்தொற்று பரவல் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் ஒவ்வருவொருக்குமிடையான இடைவெளியை அதிகரித்தல், சமுதாய நடவடிக்கைகள் போன்ற புதிய கூடுதல் நடவடிக்கைகளுக்கும் திட்டமிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் கிருமிப் பரவலைக் குறைக்க உதவும் என்று சுகாதார அமைச்சரும் கொவிட்-19ஐ கையாளும் அமைச்சர்நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவருமான திரு கான் கிம் யோங் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்,

#கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்