சிங்கப்பூரில் புதிதாக 40 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 20) உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் கிருமித்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் ஒருவர் மற்றவருடன் பாதுகாப்பான தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வதற்கான கண்டிப்பான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே பாதுகாப்பான இடைவெளியை உறுதிப்படுத்துவது முக்கியம் என்றார் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்.
250 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேளையில், மூத்தோர்களுக்கான அனைத்து சமூக நடவடிக்கைகளும் மேலும் இரண்டு வாரங்களுக்கு, அதாவது ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
250 பேருக்குக் குறைவானவர்கள் கூடும் நிகழ்வுகளிலும் ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது சமய நிகழ்வுகள், தனியார் நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.
சில்லரை விற்பனைக் கடைகள், உணவு பானக் கடைகள் போன்றவையும் இத்தகைய பாதுகாப்பான இடைவெளியை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்.
நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இயலாத இடங்களில், கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் அவர்கள் பயணிக்கும் விதத்தில் வேலை நேரங்களை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
"சுகாதார பழக்கவழக்கங்களுடன், பாதுகாப்பான இடைவெளியை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இங்கு கிருமித்தொற்று பரவலை மெதுவடையச் செய்யும்," என்று கிருமித்தொற்று பரவலைக் கையாளும் அமைச்சர்நிலைக் குழுவின் தலைவர்களுள் ஒருவருமான திரு கான் குறிப்பிட்டார்.
இன்று உறுதிப்படுத்தப்பட்ட புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தொடர்பானது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 385ஆக உயர்ந்துள்ளது.
கடைகளில் பாதுகாப்பான இடைவெளியை அமைப்பது ஆலோசனை அல்ல என்றும் கட்டாயம் என்றும் அமைச்சர்நிலைக் குழுவின் மற்றொரு தலைவரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்தால்,கொவிட்-19 பாதிப்பு இல்லாத நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டு, அரசு மருத்துவமனைகளில் கூடுதல் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை உருவாக்கப்படும் என்று நேற்று முன்தினம் அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
#சிங்கப்பூர் #கொரோனா

